மண்ணை வளமாக்க ஒரு பெரும் முயற்சி! விவசாயிகளுக்கு 1 லட்சம் மரக்கன்று வழங்கிய சிபாகா

கோயமுத்தூர் கட்டுனர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் சங்கம் (சிபாகா) மற்றும் காவேரி கூக்குரல் இயக்கம் – ஈஷா அவுட்ரீச் இணைந்து தொண்டாமுத்தூர் ஒன்றிய விவசாயிகளுக்கு ஒரு லட்சம் மரக்கன்றுகளை இலவசமாக வழங்கும் விழா திங்கட்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வு பேரூர் மத்தவராயபுரம் சீங்கபதி கிராமத்தில் நடந்தது.

விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ஸ்ரீ கிருஷ்ணா கல்வி குழுமங்களின் இயக்குனர் ஆதித்யா, செல்வம் ஏஜென்சிஸ் நிர்வாக இயக்குனர் நந்தகுமார் கலந்து கொண்டனர்.

சிபாகா தலைவர் சுவாமிநாதன் நிகழ்விற்கு தலைமை தாங்கி, வரவேற்புரை வழங்கி பேசினார்.

காவேரி கூக்குரல் கள ஒருங்கிணைப்பாளர் தமிழமாறன் இந்த திட்டம் குறித்த விளக்க உரையில் கூறியதாவது: மண்ணை காப்பாற்ற மரங்களை நட்டு பாதுகாப்பது அவசியம். ஆரோக்கியமான உணவிற்கு மண் நன்றாக இருப்பதோடு, அதற்கு அதிக அளவில் மரங்கள் நடவேண்டும். இதன் மூலம் விவசாயம் மேம்பட்டு, சுற்றுச்சூழல் நன்றாக இருக்கும்.

மாறிவரும் பருவநிலை மாற்றம் நம்மை அதிக அளவில் பாதித்துள்ளது. மேலும் காடுகளும் குறைந்துள்ளது. அதற்கு மரங்களை அதிகமாக நடுவது அவசியம். அதோடு மரம் சார்ந்த விவசாயத்தில் ஈடுபடும்போது அதிகம் வருமானமும் கிடைக்கும் எனக் கூறினார்.

தமிழ்நாடு விவசாய சங்கத்தின் தலைவர் செல்லமுத்து மரம் நடுவதன் அவசியம் பற்றி பேசுகையில்: இன்று வரை நாம் மரத்தை வெட்டிக் கொண்டு தான் இருக்கிறோம். இப்பொழுது மரம் வளர்க்காவிட்டால் எதிர்கால தலைமுறைகளை வாழ வைக்க முடியாது.

பூச்சி கொல்லி மருந்துகளால் மண்ணை விஷம் ஆக்கிவிட்டோம். எதிர்காலத்தில் நோய் இல்லாத வாழ்க்கை யை வாழ வேண்டுமெனில் விஷம் இல்லாத உணவை உண்ண வேண்டும். அதற்கு மண் வளத்தை காக்க மரம் வளர்க்க வேண்டும் என்றார்.

மேலும் மரத்தை நடுவதோடு மட்டுமில்லாமல் அதனை பாதுகாத்து பராமரிப்பதன் அவசியம் குறித்து செல்வம் ஏஜென்சிஸ் நிர்வாக இயக்குனர் நந்தகுமார் எடுத்துரைத்தார் .

இந்த நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு மரக்கன்று வழங்கப்பட்டதுடன், கல்லூரி மாணவர்களுடன் இணைந்து மரக்கன்றுகள் நடப்பட்டது.

நிகழ்வில் சிபாகா செயலாளர் ராமநாதன், சிபாகா சோசியல் சர்வீஸ் பேனல் தலைவர் செல்வராஜ், உறுப்பினர்கள், கிராம மக்கள், ரங்கநாதன் பொறியியல் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.