சங்கரா கல்வி நிறுவனங்களின் கல்லூரி தினக் கொண்டாட்டம்

சங்கரா கல்வி நிறுவனங்களின் கல்லூரி தினக் கொண்டாட்டம் கல்லூரி வளாகத்தில் கொண்டாடப்பட்டது.

பின்னணிப் பாடகர்கள் ஸ்ரீதர் சேனா மற்றும் பிரியங்கா என்.கே. ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி முதல்வர் ராதிகா வரவேற்புரை ஆற்றி 2023-2024 ஆம் ஆண்டுக்கான ஆண்டறிக்கையை வழங்கினார். தொடர்ந்து, சங்கரா பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் கணேஷ் 2023 -2024 ஆம் ஆண்டுக்கான பாலிடெக்னிக் கல்லூரியின் ஆண்டறிக்கையை சமர்ப்பித்தார்.

சங்கரா கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலரும் செயலாளருமான ராமச்சந்திரன் விழாவிற்குத் தலைமை வகித்து, தலைமை உரையை ஆற்றினார். மாணவர்கள் வாழ்நாள் முழுவதும் கற்பவர்களாக இருக்க வேண்டும் என்றும், கல்லூரி வாழ்க்கையைப் பயனுள்ளதாகவும் வெற்றிகரமானதாகவும் மாற்றி அழகான நினைவுகளை உருவாக்க வேண்டும் என்றும் உரையாற்றினார்.

இணைச் செயலாளர் சந்தியா ராமச்சந்திரன், துணை இணைச் செயலாளர் நித்யா ராமச்சந்திரன் மற்றும் அறங்காவலரும் இணைச் செயலாளருமான கல்யாணராமன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு கல்வி சார்ந்த மற்றும் கல்வி சாராத மற்றும் இணைப் பாடத்திட்ட செயல்பாடுகளில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்குப் பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன.

சிறந்த கிளப்/செல் நுண்கலை மன்றம் மற்றும் நுகர்வோர் மன்றத்திற்கும் விருது வழங்கப்பட்டது. சிறப்பு விருந்தினர்களான ஸ்ரீதர் சேனா மற்றும் பிரியங்கா என்.கே மற்றும் இசைக்குழுவினர் அற்புதமான இசை நிகழ்ச்சி மூலம் மாணவர்களுக்கு இசை விருந்தளித்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் ஆரவாரத்துடன் ரசித்துக் கொண்டாடினர்.

சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி மாணவர்கள் தங்களின் நடன கலை நிகழ்ச்சி மூலம் திறன்களை வெளிப்படுத்திப் பார்வையாளர்களின் மனதையும் கண்களையும் கவர்ந்தனர். சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியின் துணை முதல்வர் பெர்னார்ட் எட்வர்ட் நன்றியுரை வழங்கினார்.