‘சிஏஏ’ சட்டம் சொல்வது என்ன?

இந்தியக் குடியுரிமை திருத்த சட்டம் எனப்படும் ‘சிஏஏ’ (Citizenship Amendment Act – 2019) பாகிஸ்தான், வங்க தேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்கு முன்னர் இந்தியாவிற்குள் புலம்பெயர்ந்து குடியேறிய மதச்சார்பற்ற இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பௌத்தர்கள், பார்சிகள் மற்றும் கிறித்தவர்கள் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்குவதற்கான திருத்தச் சட்டம் ஆகும்.

1955-ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட குடியுரிமைச் சட்டத்தில், மேலே குறிப்பிட்ட பட்டிருக்கும் நாடுகளை சேர்ந்த புலம்பெயர்ந்த மக்கள் இந்தியாவில் 12 ஆண்டுகளுக்கு மேல் வசிக்கும் பட்சத்தில் அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த சட்டத்தில் திருத்தம் செய்து கடந்த 2019 டிசம்பர் 9 ஆம் தேதியன்று மக்களவையில் அமித் ஷாவால் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இருப்பினும் இந்நாள் வரை அமல்படுத்தவில்லை. காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக போன்ற எதிர்க்கட்சிகள் ஆதரிக்கவில்லை.

மத்திய அரசின் இந்த நடவடிக்கையைக் கடுமையாக விமர்சித்தனர். மேலும், இந்தியாவிற்குள் குடியேறிய இஸ்லாமியர்களுக்கு சிஏஏ சட்டத்தில் குடியுரிமை தரப்படவில்லை. இது அரசியல் மேடைகளில் விவாத பொருளானது.

முன்னதாக, எதிர்வரும் 2024 மக்களவை தேர்தலை கருத்தில் கொண்டு சிஏஏ சட்டத்தை அமல்படுத்தியாக வேண்டும் என்ற முனைப்புடன் பாஜக உள்ளதாகவும், இதற்கான விதிமுறைகளை உருவாக்கும் பணிகள் வருகிற மார்ச் மாதத்துக்குள் முடிந்துவிடும் என்றும் யார் நினைத்தாலும் சட்டத்தை கொண்டுவர தடுக்க முடியாது என்று மேற்குவங்க மாநிலம் தேர்தல் பரப்புரையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சிஏஏ சட்டத்தை நேற்று (மார்ச் 11) மத்திய அரசு அமல்படுத்தியது. இந்தியாவில் புலம்பெயர்ந்து வசிக்கும் மக்களிடம் ஒரு சாரரிடம் வரவேற்பையும், அசாம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் எதிர்ப்பு எழுந்துள்ளது. எதிர்வரும் மக்களவை தேர்தலைக் கருத்தில் கொண்டு மோடி தலைமையிலான மத்திய அரசின் செயல் திட்டம் என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.