வாழ்க்கையை மாற்றி அமைக்கும் ஆயுதம் புத்தகம்   – தலைமை ஆசிரியர் மாலதி பேச்சு. 

டாக்டர்.ஆர்.வி.கலை அறிவியல் கல்லூரியில்  உள்தர மதிப்பீட்டு அமைப்பு மற்றும் பெண்கள் மேம்பாட்டு அமைப்பின் சார்பாக சர்வதேச மகளிர் தின விழா நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக காரமடை பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மாலதி கலந்து கொண்டு  சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில், “ஒரு வீட்டில் பெண் கல்வி கற்றால் அந்த வீடு மட்டும் அல்ல அந்த நாடும் முன்னேறும். பெண் பெருமை மிக்கவள். தாயின் கருவறை உடலை வளர்க்கிறது. படிக்கும் வகுப்பறை அறிவை வளர்க்கிறது. கற்ற அறிவினால் நம் வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ள வேண்டும். நமக்குக் கிடைத்த வாய்ப்பை தக்க வைத்துக்கொள்ள வேண்டும். நேரம் தவறாமையும், எளிமையும், விடாமுயற்சியும், கடின உழைப்பும்  நம்மை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லும். தாழ்வு மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளக் கூடாது.  நம் வாழ்க்கையை மாற்றி அமைக்கும் மிகப்பெரிய ஆயுதம் புத்தகம். அதனால்  புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும், என்றார்.

தொடர்ந்து, மகளிர் தினவிழாவை முன்னிட்டு  நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிக்குச் சிறப்பு விருந்தினர் சான்றிதழ்கள் வழங்கிப் பாராட்டினார்.

முன்னதாக நிகழ்வில் கல்லூரி முதல்வர் ரூபா தலைமையேற்று உரையாற்றினார். தமிழ்த்துறைத்  தலைவர் ஜெயந்தி வரவேற்புரை வழங்கினார்

இதில் துணை முதல்வர்களான சண்முகப்பிரியா, தேவப்பிரியா,  துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.