கே.எம்.சி.ஹெச்-ல் சர்வதேச குழந்தைகள் புற்றுநோய் தின நிகழ்வு

கே.எம்.சி.ஹெச். மருத்துவமனை சார்பில் சர்வதேச குழந்தைகள் புற்றுநோய் தினத்தில் சிறப்பு நிகழ்வு நடைபெற்றது. குழந்தைகளுக்கான பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

கே.எம்.சி.ஹெச். மருத்துவமனை தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் நல்ல ஜி பழனிசாமி, துணைத் தலைவர் டாக்டர் தவமணி தேவி பழனிசாமி மற்றும் செயல் இயக்குநர் டாக்டர் அருண் பழனிசாமி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

குழந்தைகள் புற்றுநோயால் பாதிக்கப்படுவது இந்தியாவில் அதிக அளவில் உள்ளது. ஒவ்வொரு வருடமும் 0 முதல் 14 வயது வரையுள்ள சுமார் 50,000 குழந்தைகள் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர் என்று புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இது உலகளவில் நான்கில் ஒரு பங்கு வகிக்கிறது.

குழந்தைகள் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 15ம் தேதி உலக குழந்தைகள் புற்றுநோய் தினமாக அனுசரிக்கப்படுகிறது. குழந்தைகள் தங்கம் போன்று தூய்மையானவர்கள் மற்றும் போற்றிப் பாதுகாக்கப்படுபவர்கள் என்பதைக் குறிக்கும் வகையில் இதன் அடையாளச் சின்னமாகத் தங்க நிற ரிப்பன் குழந்தைகளுக்கு அணிவிக்கப்படுகிறது.. குழந்தைகளிடம் உள்ள தன்னம்பிக்கை, தைரியம் ஆகியவற்றின் துணையோடு அவர்கள் இந்த நோயை எதிர்த்துப்போராடி வெற்றி காண்கிறார்கள்

குழந்தைகளிடம் பொதுவாக இரத்தப் புற்றுநோய் அதிகம் காணப்படுகிறது. அதற்கு அடுத்தபடியாக மூளை கட்டி மற்றும் உறுப்புகளில் புற்றுநோய் ஆகியவை உள்ளன. உடற்சோர்வு, இரத்த சோகை, தோல் மற்றும் ஈறுகளிலிருந்து இரத்தம் வடிதல், அடிக்கடி தொற்று ஏற்படுதல் முதலானவை இதன் ஒருசில அறிகுறிகளாகும்.

இந்த அறிகுறிகள் இருந்தாலே அது புற்றுநோயாகத்தான் இருக்கவேண்டும் என்று அவசியமில்லை. எனினும் சந்தேகம் ஏற்பட்டால் பெற்றோர்கள் உடனடியாக மருத்துவரைக் கலந்தாலோசிக்க வேண்டும். கடுமையான தலைவலியுடன் வாந்தி, கை கால் வலிப்பு, பச்சிளம் குழந்தைகளின் தலை அதீத வீக்கம், அசாதாரண நடை மற்றும் நடத்தையில் மாறுபாடு ஆகியவை மூளை நோய் புற்றுநோய் இருப்பதற்கான அறிகுறிகளாக இருக்கலாம். தலைமுதல் பாதம் வரை உடலின் எப்பகுதியும் வேகமாக வீங்கினால் அது புற்றுநோயாக இருக்கலாம்.

காலம் தாழ்த்தாது முன்னதாகவே பரிசோதனைகள் எடுத்து உரியச் சிகிச்சைகளும் மேற்கொண்டால் புற்றுநோயைக் குணப்படுத்திவிட இயலும். புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்குக் குழந்தைகள் புற்றுநோய் சிகிச்சை நிபுணர்கள், தீவிர சிகிச்சை மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பெற்றோர்கள் மற்றும் சமூகமும் ஆதரவாக இருந்து ஒருங்கிணைந்த சிகிச்சை முறை மேற்கொள்வது சிறந்த பலனைத் தருவதாக இருக்கும். கே.எம்.சி.ஹெச். மருத்துவமனையில் அனைத்து வசதிகளுடன் கூடிய குழந்தைகளுக்கான முழுமையான புற்றுநோய் சிகிச்சைப் பிரிவு செயல்படுகிறது.

நிகழ்ச்சியில் விழிப்புணர்வுடன் குழந்தைகளுக்கான விளையாட்டு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இதில் ஏராளமான குழந்தைகள் அவர்கள் பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் பங்கேற்றனர்.