சைமாவில் ‘ஜவுளிச் சந்தையில் போட்டி’  விழிப்புணர்வு நிகழ்வு 

ஜவுளிச் சந்தையில் போட்டி பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி சைமாவில் நடைபெற்றது.  இந்தியப் போட்டி ஆணையம் (காம்படிஷன் கமிஷன் ஆப் இந்தியா) தொழில்துறையில் உள்ள அனைத்து பங்குதாரர்களின் நலனைப் பாதுகாப்பதில் முக்கிய பங்காற்றி, சந்தையில் எந்தவொரு பங்குதாரரும் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளைக் கடைப்பிடிக்காததை உறுதி செய்து, அதன் மூலம் சமநிலையை உருவாக்கும் பணியைச் செய்து வருகிறது. இந்நிலையில் போட்டிச் சட்டத்தின் நோக்கத்தைப் புரிந்து கொள்வதற்கு, “ஜவுளி சந்தையில் போட்டி” என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை அதன் வளாகத்தில் நடத்தியது.

இது தொடர்பாக, தென்னிந்தியப் பஞ்சாலைகள் சங்கத் (சைமா) தலைவர் சுந்தரராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  இந்நிகழ்வு ஜவுளித் தொழிலதிபர்களுக்கான கல்விசார் அறிமுக நிகழ்வாகும்.  இந்தியப் போட்டி ஆணையத்தின் தென்னக சட்ட இணை இயக்குநர் ஸ்ரீராஜ்  விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆணையம் செயல்படும் விதம் மற்றும் அதன் நோக்கத்தைப் பற்றி கூட்டத்தில் விளக்கினார்.

போட்டிச் சட்டத்தின் வரம்பிற்குள் உள்ள நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளை அகற்றுவதற்கும்.  எளிதாக்குவதற்கும் சிக்கல்களைத் தீர்க்க முன்னுரிமை அளிப்பதற்கும், அதிகபட்ச ஆட்சி குறைந்தபட்ச அரசாங்கம் என்ற நோக்கத்துடன் ஆணையம் செயல்படுகிறது என்று ஸ்ரீராஜ் தெரிவித்தார்.

போட்டிச் சட்டம் 2002, ஒப்பற்ற பேரம் பேசும் ஆற்றல் மற்றும் பிற பங்குதாரர்களுக்கு விதிமுறைகளை ஆணையிடும் நிலைப்பாட்டைக் கொண்ட ஆதிக்க வணிகர்களின் தவறான மற்றும் நியாயமற்ற நடத்தையைக் தடை செய்து அபராதம் விதிக்க வழி செய்கிறது. உற்பத்தியாளர்களால் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டால், குறிப்பாக விலை நிர்ணய நடைமுறைகள் மூலம் நுகர்வோருக்குத் தீங்கு விளைவிக்கும் போது, இந்தியப் போட்டி ஆணையம் தலையிடும், அநியாயமாக லாபத்தை அதிகரிக்கும் நோக்கில் வணிக இணைதல்களை ஆணையம் ஒழுங்குபடுத்தும் என்று அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த  50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.