ஆடல், பாடல் கொண்டாடத்துடன் கலை கட்டிய இந்துஸ்தான் ‘ஹிலாரிகஸ்’

இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் ‘ஹிலாரிகஸ்’ ஆண்டு நிகழ்ச்சி வெகு விமர்சையாக கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

கோயம்புத்தூர் நவ இந்தியாவில் உள்ள இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியின் ஓர் அடையாளமான ‘ஹிலாரிகஸ்’ நிகழ்ச்சி நடைபெறும். மாநில அளவில் பல்வேறு கல்லூரிகளில் இருந்தும் மாணவ-மாணவியர் பங்கேற்று தங்கள் கலைத் திறமைகளை வெளிப்படுத்துவர். இந்த ஆண்டு நிகழச்சிக்கு சிறப்பு விருந்தினராகக் கோவை மேற்கு மண்டல ஐ.ஜி. பவானீஸ்வரி குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். கல்லூரி முதல்வர் பொன்னுசாமி வரவேற்புரை வழங்கினார்.

கடல் அலைகள் போல் திரண்ட மாணவர்கள்

மேற்கு மண்டல ஐ.ஜி. பவானீஸ்வரி பேசுகையில், ‘கல்லூரி நாட்கள் நம் வாழ்வின் வசந்த காலம் ஆகும். விளையாட்டு, கலை, இலக்கியம் என நமது திறமைகளை வெளிக் கொண்டுவரக் கல்லூரிகளுக்கு இடையிலான இது போன்ற நிகழ்ச்சிகள் என்றுமே நினைவில் இருப்பவை. கடல் அலைகள் போன்று மாணவர்கள் இங்குத் திரண்டு இருப்பது மகிழ்வாக உள்ளது. இந்துஸ்தான் கல்விக் குழுமத்தின் முதல் கல்லூரியாக இந்த கலை அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது என்பது கூடுதல் சிறப்பு. 22 ஆண்டுகளாக இக்கல்லூரியில் ‘ஹிலாரிகஸ்’ நிகழ்ச்சி நடைபெறுகிறது. படிப்புடன் இது போன்ற கலை நிகழ்ச்சிகள் நடத்துவது மாணவர்களின் தனித் திறமைகளை மேம்படுத்துகிறது. இந்த வயதில் முடிந்தவரைப் பொறுப்புகளைக் கையில் எடுத்துக் கொள்ள கற்றுக் கொள்ளுங்கள். கல்வியோடு வாழ்க்கை பாடங்களைக் காற்றுக் கொள்கையில் அதுவே நம்மை உயர்த்திவிடும்’என்றார்.

மாணவர்கள் வெற்றிக்கு உறுதுணை இந்துஸ்தான்

‘அறிவுக் குளத்திலே மலர்ந்த அந்தி மலர்களே! என் உள்ளம் கவர்ந்த ஊதாப் பூக்களே!’ என்று தனது கவிதை நடையில் பேசத் தொடங்கிய இந்துஸ்தான கல்வி குழுமங்களின் தாளாளர் சரஸ்வதி கண்ணையன் பேசத் தொடங்கினார்.‘மானவர்களாகிய உங்களால் இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுகிறது. மாணவர்களின் திறமைக்கு ஏற்ற மேடை இது. ‘இப்படை தோற்கின் எப்படை வெல்லும்’என்பது போல் இந்துஸ்தான மாணவர்கள் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும் ஆசிரியர்களின் பங்களிப்பை இந்த நேரத்தில் குறிப்பிடுவது அவசியம். மாணவர்களின் கலை திறன்களை பார்த்து ரசிக்க திரைத்துறை பிரபலங்கள் வருகை முக்கியத்துவம் பெறுகிறது’ என்று பேசினார்.

பாஸ் ஆகலையா? டென்ஷன் எதுக்கு?

இந்நிகழ்ச்சியின் கூடுதல் சிறப்பம்சமாக ஆண்டு தோறும் திரைத்துறை பிரபலங்கக்கள் பங்கேற்பது வழக்கம். இந்த ஆண்டு முன்னணி நடிகர் ஜெயம்ரவி, இயக்குநர் ராம், பாடல் ஆசிரியர் மதன் கார்க்கி, நடிகை அஞ்சலி, நடிகர் அர்ஜூன் தாஸ், ஷாம் விஷால், வி.ஜே. சித்து, ஹர்ஷத், அனிகா சுரேந்திரன் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றனர்.

ஜெயம்ரவி பேசுகையில்,‘கல்லூரி நாட்களில் மகிழ்ச்சியாக இருங்கள், எதற்கும் டென்ஷன் வேண்டாம். தேர்வுகளில் பாஸ் ஆகலையா ? கவலை வேண்டாம். வாழ்க்கை எனும் தேர்வில் தேர்ச்சி பெற கற்றுக் கொள்ளுங்கள். அதற்கு, கல்லூரி வாழ்க்கை அடித்தளம். இந்த காலேஜ் டேஸ்-ல லைஃப் என்னனு கத்துக்கோங்க’என்று பேசி அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துகளை தெரிவித்ததோடு மாணவர்களுடன் நடனமாடி நிகழ்ச்சியைச் சிறப்பித்தார்.