என்.ஐ.ஏ கல்வி நிறுவனங்களின் நிறுவனர் தின விழா 

என்.ஐ.ஏ கல்வி நிறுவனங்களின் 70-ஆம் ஆண்டு நிறுவனர் தின விழா மற்றும் 50ம் ஆண்டு நினைவு சொற்பொழிவானது, கல்வி நிறுவன வளாகத்தில் அமைந்துள்ள அமரர் நாச்சிமுத்துக் கவுண்டர் நூற்றாண்டு விழா அரங்கத்தில் நடைபெற்றது.

நாச்சிமுத்து கவுண்டரின் நினைவாக ஆண்டுதோறும் பிப்ரவரி 7 ஆம் தேதி “நிறுவனர் தினம்” கொண்டாடப்படுகிறது.  இந்நாளில் என்.ஐ.ஏ கல்வி நிறுவனங்கள், மனித சமுதாயத்திற்குச் சிறந்த சேவையாற்றியும், தனது விருப்பமான துறையில் வெற்றியின் உச்சத்தைத் தொட்ட சிறந்த மனிதரைத் தேர்ந்தெடுத்து, “கொங்கு நாட்டுச் சாதனையாளர்” என்ற விருதை அர்ப்பணித்துக் கௌரவிப்பது வழக்கம்.

அதன் வகையில், இந்த ஆண்டு மனித சமுதாயத்திற்குச் சிறந்த சேவையாற்றிய ஈரோட்டைச் சார்ந்த யுஆர்சி கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்டின், நிர்வாக இயக்குநர் சி.தேவராஜனிற்கு  “கொங்கு நாட்டுச் சாதனையாளர்”  விருது வழங்கப்பட்டது. இதனை என்.ஐ.ஏ. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் மாணிக்கம் வழங்கினார்.

விழாவில் என்.ஐ.ஏ. கல்வி நிறுவனங்களின் செயலர் இராமசாமி வரவேற்புரை வழங்கினார்.

பொள்ளாச்சி என்.ஐ.ஏ. கல்வி நிறுவனங்களின் தலைவர் மற்றும் சக்தி சுகர்ஸ் லிமிடெட்டின் செயல் தலைவர், மாணிக்கம் தலைமையுறையாற்றினார். விருதினைப் பெற்ற தேவராஜன் ஏற்புரை வழங்கி பேசுகையில் மாணவர்கள் தங்களின் இலக்கை நோக்கி விடா முயற்சியுடன் இருக்க வேண்டுமென்று வலியுறுத்தினார்.

நாச்சிமுத்துக் கவுண்டரின் நினைவுநாள் பேருரையை, சென்னை உயர் நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞரான இராமலிங்கம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சொற்பொழிவாற்றினார். அவர் தமது உரையில், “பரசுராமர் மற்றும் அவரது மாணவர் கர்ணன் ஆகியோரின் எழுச்சியூட்டும் கதையை அவர் விளக்கினார். மாணவர்களை வாழ்க்கையின் உச்சத்திற்குக் கொண்டு செல்ல ஆசிரியர்கள் படிக்கட்டுகளாகச் செயல்படுகிறார்கள். மாணவர்கள் தங்கள் வாழ்க்கையில் தோல்விகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் அறிவுறுத்தி,  கல்லூரி மற்றும் பள்ளி நாட்களில் நட்பின் முக்கியத்துவத்தைப் பகிர்ந்து கொண்டார். மேலும், ஒவ்வொருவரும் தங்கள் இலக்குகளில் கவனம் செலுத்தி அதை அடையும் வரை தொடர்ந்து உழைக்க வேண்டும் என்றார்.

தொடர்ந்து, நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரியின் ரத்தினங்கள் என்ற விருதானது, கல்லூரியின் பழைய மாணவர்களான கோவை சில்வர் கிரௌன் எண்டர்பிரைசஷின் பொது மேலாளர் சுரேந்திரனுக்கும் (1973 முதுநிலை வாகனவியல் துறை) , சூலூர் புரொபல் இண்டஸ்டீரீஸ் (பி) லிமிடெட்டின் முதன்மை நிர்வாக அதிகாரி ராமச்சந்திரனினுக்கும் (1992 இயந்திரவியல் துறை) வழங்கப்பட்டது.

விழாவிற்கு என்.ஐ.ஏ கல்வி நிறுவனங்களின் தாளாளர் ஹரிஹரசுதன் வாழ்த்துரை வழங்கினார்.

இதில் ஸ்ரீ சாமுண்டீஸ்வரி சர்க்கரை ஆலையின் நிர்வாக இயக்குநர் சீனிவாசன், குமரகுரு பொறியியல் கல்லூரியின் இணைத் தாளாளர் சங்கர் வாணவராயர், என்ஐஏ கல்வி நிறுவனங்களின் தலைமை மனித வள அதிகாரி சுப்ரமணியன், வானவராயர் வேளாண்மை கல்லூரியின் இயக்குநர் கெம்பு செட்டி,  என்ஐஏ பள்ளி நிர்வாக அதிகாரி சின்ன சாமி மற்றும் பல முக்கிய நிர்வாகிகள், பேராசிரியர்கள், பணியாளர்கள், மாணவ மாணவிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.