இடைக்கால பட்ஜெட்டில் ரயில்வேக்கு கூடுதல் கவனம்?

நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலுக்கான பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் முழு வீச்சில் கவனித்து வருகின்றது. இந்நிலையில், நாடாளுமன்ற கூட்டுத் தொடர் வருகிற ஜனவரி 31 ஆம் தேதி தொடங்க உள்ளது. பிப்ரவரி 1 ஆம் தேதி பா.ஜ.க. அரசு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறது.

மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசின் இறுதி நாடாளுமன்ற கூட்டுத் தொடர் என்பதால் பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதனிடையில், பிசினஸ் டுடேயின் அறிக்கையின் படி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவிருக்கும் இடைக்கால பட்ஜெட்டில் தேசிய போக்குவரத்துத் துறையில் மூலதன செலவினங்களுக்கான கணிதமான நிதியை ஒதுக்கக்கூடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ரயில்வே துறையின் மேம்பாட்டு, அதிவிரைவு ரயில்களின் நவீன மேம்பாடு, வந்தே பாரத் ரயில்களின் மேம்பட்ட பாதுகாப்பு ஆகியவை நிதி ஒதுக்கீட்டில் முக்கியத்துவம் பெரும் என வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

2023-2024ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் மதிப்பீட்டில் ரயில்வேக்கு வழங்கப்பட்ட ரூ.2.4 லட்சம் கோடிக்கு மாறாக, 2024-25 ஆம் நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு ரூ.2.8-3 லட்சம் கோடியை ஒதுக்கக்கூடும் என எதிர்பார்க்கின்றனர்.