தர வரிசை பட்டியல்: உலகளவில் 3வது இடம் பிடித்த தேசிய பங்குச் சந்தை நிறுவனம்

ஈக்விட்டி சந்தை தர வரிசை பட்டியலில் தொடர்ந்து 5வது ஆண்டாக உலக அளவில் 3வது இடம் பிடித்து தேசிய பங்குச் சந்தை நிறுவனம் சாதனை படைத்துள்ளது. என்எஸ்இ குழுமத்தின் இந்தியத் தேசிய பங்குச் சந்தை மற்றும் என்எஸ்இ இன்டர்நேஷனல் எக்ஸ்சேஞ்ச் ஆகியவை கடந்த ஆண்டில் உலகின் மிகப்பெரிய பங்கு பரிவர்த்தனை குழுவாக மீண்டும் உருவெடுத்துள்ளது.

உலக பரிவர்த்தனை கூட்டமைப்பு பராமரிக்கும் புள்ளிவிவரங்களின்படி, கடந்த ஆண்டில் வர்த்தகங்களின் எண்ணிக்கையில் பங்குப் பிரிவில் என்எஸ்இ 3வது இடத்தில் உள்ளது. என்எஸ்இ-ல் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மூலதனம் 4 டிரில்லியன் அமெரிக்க டாலர்களைத் தாண்டியது, பட்டியலிடப்பட்ட சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் ரூ. 1,00,000 கோடியைத் தாண்டியது மற்றும் நிப்டி 50 இன்டெக்ஸ் முதல் முறையாக 20,000 குறியீட்டு அளவைத் தாண்டியது உள்ளிட்ட பல்வேறு சாதனைகளை என்எஸ்இ கடந்த ஆண்டில் படைத்துள்ளது. மேலும் இந்த எக்ஸ்சேஞ்சில் தனிப்பட்ட பதிவைப் பொறுத்தவரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டின் இறுதியில் 8.5 கோடியைத் தாண்டியது. என்எஸ்இ அதன் பங்குப் பிரிவில் 2014 முதல் 2023 வரை தொடர்ந்து 10வது ஆண்டாக வர்த்தகம் செய்யப்படும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையில் ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சியைக் கண்டுள்ளது.

நவம்பர் 30, 2023 அன்று பங்குப் பிரிவில் ரூ. 167,942.47 கோடியாகவும், டிசம்பர் 2, 2023 அன்று ஈக்விட்டி டெரிவேடிவ் பிரிவில் ரூ. 381,623.12 கோடியாகவும் ஒரே நாளில் அதிக வருவாயை என்எஸ்இ ஈட்டியுள்ளது. ஈக்விட்டி டெரிவேட்டிவ்ஸ் பணச் சந்தை விற்றுமுதல் விகிதம் கடந்த 2022ம் ஆண்டில் 2.86 ஆக இருந்து 2023ம் ஆண்டில் 2.64 ஆகக் குறைந்துள்ளது. என்எஸ்இ பங்குப் பிரிவானது டி+1 அடிப்படையில் அனைத்துப் பத்திரங்களின் தீர்வுக்கான மாற்றத்தை நிறைவு செய்தது. முதன்மை சந்தையில், பத்திரங்களைப் பட்டியலிடுவதற்கான காலவரிசை டி+3 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. என்எஸ்இ இந்த ஆண்டு சமூக பங்குச் சந்தையை ஒரு பிரிவாக அறிமுகப்படுத்தியது. இது ஒட்டுமொத்த சுற்றுச்சூழல் அமைப்பை மேம்படுத்தும் விதமாக சமூக தொண்டு நிறுவனங்கள் தங்கள் பணியைப் பரந்து விரிந்த அளவில் மேற்கொள்ள, ஜீரோ கூப்பன் ஜீரோ முதன்மைப் பத்திரங்கள் போன்ற திட்டங்கள் மூலம் நிதி திரட்ட உதவுகிறது. இந்த பிரிவில் 42 லாப நோக்கமற்ற நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன.கமாடிட்டி டெரிவேடிவ்ஸ் பிரிவில், இந்த எக்ஸ்சேஞ்ச் 21 புதிய கமாடிட்டி டெரிவேடிவ்ஸ் ஒப்பந்தத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, இதில் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, தங்கம், வெள்ளி மற்றும் அடிப்படை உலோகங்கள் உள்ளிட்டவையும் அடங்கும்.

இது குறித்து என்எஸ்இ  தலைமை வணிக மேம்பாட்டு அதிகாரி ஸ்ரீராம் கிருஷ்ணன் கூறுகையில், ஈக்விட்டி பிரிவில் 3வது இடத்தைப் பெறுவதும், மிகப்பெரிய டெரிவேடிவ் எக்சேஞ்சாக இருப்பதும் உலக வரைபடத்தில் இந்திய மூலதனச் சந்தை சுற்றுச்சூழல் அமைப்பின் வலுவான திறன்களை நிரூபிக்கிறது. இது புதிய முதலீட்டாளர்களை ஈர்க்க உதவுவதோடு, இந்தியச் சந்தைகளுக்கு நிதி வளர்ச்சிக்கும், மூலதன உருவாக்கத்திற்கு உதவும். இந்திய அரசு, செக்யூரிட்டிஸ் அன்ட் எக்சேஞ்ச் போர்டு, இந்திய ரிசர்வ் வங்கி, வர்த்தக உறுப்பினர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் பிற பங்குதாரர்கள் தொடர்ந்து எங்களுக்கு அளித்து வரும் ஆதரவிற்கு நான் இந்தச் சந்தர்ப்பத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் இவ்வாறு அவர் தெரிவித்தார்.