2023 ஆண்டில் பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணங்கள் எத்தனை தெரியுமா?

இந்தியாவின் 14-ஆவது பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றுக் கொண்ட நாளிலிருந்தே அரசு முறை வெளிநாட்டுச் சுற்றுப்பயணங்களில் தனிக் கவனம் செலுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், 2023 ஆம் ஆண்டில் பிரதமர் மோடியின் முக்கிய சர்வதேச பயணங்கள் குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளன.

அதன் விவரங்கள்.,

அமெரிக்கா, பிரான்ஸ், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட 11 நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு இருக்கிறார்.

ஜப்பான், பப்புவா நியூ கினியா மற்றும் ஆஸ்திரேலியா பயணம் (மே 19 – மே 25)

ஜப்பானின் ஹிரோஷிமாவில் நடந்த ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். ஜி7 உச்சி மாநாட்டைத் தொடர்ந்து, பிரதமர் மோடி பப்புவா -நியூ கினியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார், இது இண்டோ -பசிபிக் நாட்டிற்கு இந்தியப் பிரதமரின் முதல் வருகையாக இந்த பயணம் அமைந்தது.

இதையடுத்து, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் விடுத்த அழைப்பை ஏற்று பிரதமர் மோடி, சிட்னி சென்றார். அங்கு, பிரதமர் மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் உடன் இணைந்து, உள்ளூர் இந்திய சமூகத்தினருடன் ஒரு சிறப்பு நிகழ்வில் உரையாடினார். மேலும், இந்த சமூக நிகழ்வின் போது, ஹாரிஸ் பார்க் பகுதி ‘லிட்டில் இந்தியா’ என அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அமெரிக்கா மற்றும் எகிப்து (ஜூன் 20 – ஜூன் 25)

ஜூன் மாதம் பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் மற்றும் ஜில் பிடன் ஆகியோரின் அழைப்பை ஏற்று நியூயார்க்கில் சென்றார். மேலும், ஜூன் 21 ஆம் தேதியன்று ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் சர்வதேச யோகா தினத்திற்கான நிகழ்ச்சியில் பிரதமர் தலைமை தாங்கினார்.

இதைத் தொடர்ந்து, ஜூன் 22ஆம் தேதி வெள்ளை மாளிகையில் அரசு வரவேற்பைப் ஏற்க வாஷிங்டன் சென்றார் மோடி. அதைத் தொடர்ந்து, ஜனாதிபதி அப்தெல்-ஃபத்தா எல்-சிசியின் அழைப்பின் பேரில், எகிப்துக்கு அரசுமுறைப் பயணமாக கெய்ரோவுக்குச் சென்றார் பிரதமர் மோடி.

பிரான்ஸ் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (ஜூலை 13 – ஜூலை 15)

பாஸ்டில் தின ராணுவ அணிவகுப்பில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கப் பிரதமர் மோடி பிரான்ஸ் சென்றார். கடந்த 2017-ம் ஆண்டு அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்க்கு பிறகு வெளிநாட்டுத் தலைவர் ஒருவருக்கு வழங்கப்பட்ட மரியாதையாக இந்த பயணம் இருந்தது.

பிரான்சில் இருந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள அபுதாபிக்கு சென்ற பிரதமர், ஜனாதிபதி ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

தென்னாப்பிரிக்கா மற்றும் கிரீஸ் (ஆகஸ்ட் 22 – ஆகஸ்ட் 26)

ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி தென்னாப்பிரிக்காவிற்குச் சென்றது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

இந்த பயணத்தையடுத்து கிரீஸில் சென்றார் பிரதமர் மோடி. 40 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியப் பிரதமர் கிரீஸில் சென்றது இதுவே முதல் முறையாகும். இந்த பயணம் இரு நாட்டின் கூட்டாண்மைக்கான உறவை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தியதாக அமைந்தது.

இந்தோனேசியா (செப். 6 – செப். 7)

கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதுதில்லியில் நடந்த ஜி20 மாநாட்டிற்கு சில நாட்களுக்கு முன்பு, இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோவின் அழைப்பின் பேரில் 18-வது கிழக்கு ஆசிய உச்சி மாநாடு மற்றும் 20-வது ஆசியான்-இந்திய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

துபாய் (நவம்பர் 30 – டிசம்பர் 1)

உலக காலநிலை மாற்றம் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காகப் பிரதமர் நரேந்திர மோடி டிசம்பர் மாதம் தொடக்கத்தில் துபாய் சென்றார்.