2023-ல் மின்னிய விளையாட்டு நட்சத்திரங்கள்

2023 ஆம் ஆண்டு இனிதே நிறைவடையவுள்ள வேளையில், சர்வதேச விளையாட்டு அரங்கில் இந்தியாவை உலக அளவில் முன்னிலைப்படுத்தி, பெருமிதம் கொள்ளச் செய்த மின்னிய விளையாட்டு நட்சத்திரங்கள் பற்றிய ஓர் பார்வை.,

சீனாவின் ஹாங்சோவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் அபாரமான செயல்பாடாக இருந்தாலும் சரி அல்லது நியூசிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பை அரையிறுதியில் விராட் கோலியின் அபாரமான பேட்டிங்காக இருந்தாலும் சரி, இந்த வெற்றிகள் ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்துகிறது – இந்தியாவில் விளையாட்டுத் துறை குறிப்பிடத்தக்க வளர்ச்சியை நோக்கிச் செல்கிறது என்று.

ஷீத்தல் தேவி

கைகள் வளர்ச்சி குன்றிய 16 வயதான ஷீத்தல் தேவி, சீனாவின் ஹாங்சோ நகரில் நடந்த ஆசிய பாரா வில்வித்தை விளையாட்டு போட்டியில் இரு தங்கபதக்கங்கள் வென்றிருந்தார்.

சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி

ஆசிய விளையாட்டில் இதுவரை எந்த இந்தியரும் பேட்மிண்டனில் தங்கப் பதக்கம் வென்றதில்லை என்ற நிலையை தகர்த்து தங்கம் வென்று புதிய சாதனை படைத்து அசத்தினர் விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஜோடி.

பிரக்ஞானந்தா மற்றும் வைஷாலி

இந்திய செஸ் விளையாட்டில் அக்கா-தம்பி இருவரும் புதிய வரலாற்றுச் சாதனை படைத்து இருக்கின்றனர். 22 வயதாகும் வைஷாலி இந்தியாவின் மூன்றாவது கிராண்ட்மாஸ்டராகவும் தமிழ்நாட்டில் முதல் கிராண்ட்மாஸ்டர் பெண்ணாகவும் சாதனைப் படைத்திருக்கிறார்.

அதே போல், உலக செஸ் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள மேக்னஸ் கார்ல்சனை எதிர்த்து 2023 உலக செஸ் கோப்பை தொடரில் இறுதி சுற்றுக்குள் நுழைந்த இளம் வயது சாதனையாளர் என்ற பெருமையைத் தனதாக்கிக் கொண்டார் பிரக்ஞானந்தா.

ரவி பிஷ்னோய் மற்றும் சுப்மன் கில்

டி 20 கிரிக்கெட் பந்து வீச்சாளர்களுக்கான ஐசிசி-யின் சர்வதேச தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய் முதலிடத்துக்கு முன்னேறி கிரிக்கெட் உலகில் அதிகம் பேசப்பட்ட நபராகத் திகழ்கிறார்.

வலது கை டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான ஷுப்மான் கில், ஐசிசி-யின் ஒருநாள் போட்டிக்கான தரவரிசை பட்டியலில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் பின்னுக்குத் தள்ளி முதல் பேட்ஸ்மேன் ஆனார். ஒரு நாள் போட்டியில் இந்த ஆண்டு கில் ஏழு சதங்களும் ஐந்து அரை சதங்களும் அடித்துள்ளார்.

விராட் கோலி

உலக கோப்பை தொடரில் நியூசிலாந்திற்கு எதிராக இந்தியா விளையாடிய அரையிறுதிப் போட்டியில், விராட் சதம் அடித்து வரலாற்று சாதனை படைத்தார். கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் ஒரு நாள் போட்டிகளில் 49 சதங்கள் அடித்திருந்த நிலையில் விராட் தனது 50-வது சதத்தை பதிவு செய்தார்.

நீரஜ் சோப்ரா

உலக தடகள சாம்பியன்ஷிப்பில் போட்டியில் ஈட்டி எறிதல் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்று முத்திரை படைத்தார் நீரஜ் சோப்ரா. 2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார் நீரஜ் சோப்ரா. இதன் மூலம் இந்தியத் தடகள வரலாற்றின் அடையாளமாக மாறி வருகிறார் .

பருல் சவுத்ரி

ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிருக்கான 5000 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இந்தியாவுக்கான முதல் தங்கப் பதக்கம், மகளிருக்கான 3000 மீட்டர் ஸ்டீபிள் சேஸில் வெள்ளிப் பதக்கம் பெற்று இந்திய விளையாட்டுத் துறையில் வரலாற்று படைத்திருக்கிறார்.