ரத்தன் டாடா ஒரு சாதனையாளர்!

இந்திய மக்களால் பெரிதும் மதிக்கத் தக்க தொழிலதிபர்களில் ஒருவரான ரத்தன் டாடா, சிறந்த தொழிலதிபர் என்ற அடையாளத்தைத் தாண்டி அவர் ஒரு சிறந்த சமூக நெறி தவறா சிந்தனையாளர். டாடா ஸ்டீல்ஸ் நிறுவனத்தில் அடிப்படை செயல்பாடுகளை நிர்வகிப்பதில் இருந்து 1961-ல் தனது தொழில் வாழ்க்கையை ரத்தன் டாடா தொடங்கினார்.

இந்தியப் பொருளாதாரத்தில் தாராளமயமாக்கல் நடந்து கொண்டிருந்த சமயத்தில் டாடா குழுமத்தை மறுசீரமைக்கத் தொடங்கினார். டெட்லி-யை வாங்குவதற்கு டாடா டீ-யையும், ஜாகுவார் லேண்ட் ரோவரை வாங்க டாடா மோட்டார்ஸையும், 2004-ல் கோரஸை வாங்க டாடா ஸ்டீலையும் பயன்படுத்தினார். இவரின், தொழில்முனைவு சிந்தனையால் மேலாண்மைத் துறை சார்ந்து படிக்கும் மாணவர்களுக்கு இன்ஸ்பிரேஷனாக திகழ்கிறார். தொழில் கோலோச்சிய அவருக்கு நான்கு முறை திருமணம் ஏற்பாடுகள் செய்ய முயற்சித்தனர். ஏனோ, திருமணம் கைகூட வில்லை. காதல் தோல்வியின் வலியைக் கடந்து தொழிலில் சாதித்தவர்.

பொது நிகழ்ச்சி, ஒன்றில் தான் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றப் பல தடைகளைத் தகர்த்து டாடா நானோ காரை அறிமுகப்படுத்தினார். காரில் செல்ல வேண்டும் என்ற நடுத்தர வர்க்கத்தினரின் கனவை நினைவாக்கினார். சொல்லப்போனால், பலருக்கும் ரத்தன் டாடா ஒரு இன்ஸ்பிரேஷனல் மாடல் ஆகவே இருந்து வருகிறார்.

எக்ஸ் (ட்விட்டர்) வலைத்தளத்தில் 12 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களுடன், நாட்டில் அதிகமானோர் பின்தொடரும் தொழிலதிபர் ரத்தன் டாடா ஆவார். தனது 86 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் ரத்தன் டாடா மக்களை நேசிக்கும் தன்மை உடைய, பண்பு உள்ளம் கொண்டவர். சமீபத்தில் புதுப்பிக்கப்பட்ட பாம்பே ஹவுஸில் விலங்குகளுக்கான உணவு, தண்ணீர், பொம்மைகள் மற்றும் விளையாட்டுப் பகுதிக்கான ஏற்பாடுகளுடன் கூடிய பிரத்யேக கொட்டில் உள்ளது. இந்த செயல் விலங்குகள் மீதான அவரது கருணையை வெளிப்படுத்துகிறது.