2040-க்குள் இந்திய வீரர்கள் நிலவில் தடம் பதிப்பர்

பூமியின் துணைக்கோளான நிலவை ஆராய்வதற்கு வல்லரசு நாடுகள் முதல் வளரும் நாடுகள் என உலக நாடுகள் முனைப்புக் காட்டி வருகின்றனர். சந்திரனால் ஈர்க்கப்படாத மனிதர்களே இல்லை என்றும் சொல்லலாம். அந்தளவுக்கு நிலவின் மீதான தீரா மோகம் அதன் மீதான ஆய்வுகளை ஆராய்ச்சியாளர்களைத் தொடர்ந்து செய்யத் தூண்டுகிறது. நம் மண்ணிலிருந்து 3 லட்சத்து 84 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சந்திரனுக்கு 1959-ஆம் ஆண்டு லூனா-2 என்ற விண்கலத்தை ரஷ்யா அனுப்பி அங்கு தரையிறக்கியது.

நிலவில் தரையிறங்கிய முதல் விண்கலம் இதுதான். இதனைத் தொடர்ந்து, 1969-ம் ஆண்டு ஜூலை 16 ஆம் தேதி நீல் ஆம்ஸ்டிராங், எட்வின் ஆல்ட்ரின், மைக்கேல் கூலின்ஸ் என்ற 3 விண்வெளி வீரர்களை அப்பல்லோ-11 விண்கலத்தின் மூலம் மனிதர்களை சந்திரனுக்கு அனுப்பி உலக மக்களை ஆசிரியத்தில் ஆழ்த்தியது அமெரிக்கா. தொடர்ந்து, சீனா விண்கலன் அனுப்பி அங்கு தரையிறக்கியது.

இதனையடுத்து, சந்திரனில் ஆளில்லா விண்கலத்தை தரையிறக்கிய 4-வது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது. 2008 ஆம் ஆண்டு அக்டோபர் 22 ஆம் தேதி முதன் முதலாக சந்திரயான்-1 என்ற ஆளில்லா விண்கலத்தை அனுப்பியது. அது, 100 கிலோ மீட்டர் உயரத்தில் சந்திரனை சுற்றி அதன் மேற்பரப்பை ஆய்வு செய்து புகைப்படங்களை எடுத்து அனுப்பியது. தொடர்ந்து, சந்திரயான்-2 விண்கலம் தரையிறங்கிய போது தோல்வி அடைந்தது. தோல்வியில் கற்றுக் கொண்ட பாடங்கள் சந்திரயான்-3 வெற்றிக்கு வித்திட்டது. நிலவின் தென் துருவத்தில் விண்கலத்தை தலையிரக்கிய முதல் நாடு என்ற சாதனையும் மற்றும் ரஷியா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளை தொடர்ந்து இந்தியா நிலவில் விண்கலத்தைத் தரையிறங்கிய நான்காவது நாடு என்ற வரலாற்று சாதனை படைத்தது.

இந்த நிலையில், சந்திரயான்- 3 வெற்றியைத் தொடர்ந்து 2040 ஆம் ஆண்டுக்குள் சந்திரனுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் உள்ளதாகவும், அந்த சோதனைக்காக விமானப்படையை சேர்ந்த 4 விமானிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்திருக்கிறர். சந்திரனுக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சி வெற்றிபெற்றால், வரலாற்றில் இந்தியா முத்திரை பதிக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.