முதல் பெண் நீதிபதியான ஃபாத்திமா பீவி காலமானார்! யார் இவர் ?

தமிழ் நாடு முன்னாள் ஆளுநர் ஃபாத்திமா பீவி (வயது 96) உடல்நல குறைவால் காலமானார். இவர் 1997ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு ஆளுநராகப் பதவி வகித்தார்.

உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி என்ற பெருமையை பெற்றுள்ள இவர், கேரள மாநிலம், பத்தனம் திட்டா மாவட்டத்தில் 1927ஆம் ஆண்டு பிறந்தார்.

பத்தனம் திட்டாவில் உள்ள கத்தோலிக்கட் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்த பின்னர், திருவனந்தபுரம் பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டம் பெற்றார்.இதையடுத்து, அரசு சட்டக்கல்லூரியில் சட்டப் படிப்பும் படித்தார்.

மேலும், 1950 ஆம் ஆண்டில் நடந்த பார்கவுன்சில் தேர்வில் முதலிடம் பெற்று கேரள துணை நீதித்துறை சேவைகளில் முன்சீஃப் ஆக நியமனம் செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து, துணை நீதிபதியாகவும், தலைமை நீதித்துறை நடுவராகவும், மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதியாகவும், வருமான வரி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினராகவும் தனது பதவியில் விரைவில் உயர்ந்தார்.

இதைத்தொடர்ந்து, பல்வேறு உயர் நீதிமன்றத்தில் நியமிக்கப்பட்டு, ஆசியாவிலேயே ஒரு நாட்டின் உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

1997ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு ஆளுநராக இருந்த பாத்திமா பீவி, கலைஞர் கருணாநிதி கைது செய்யப்பட்டபோது மத்திய அரசுடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக தனது பதவியை அவர் ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.

நாடு முழுவதும், உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பதவியேற்ற பிறகு, தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டதன் மூலம் அரசியல் அரங்கில் தனது முத்திரையைப் பதித்துள்ளார் ஃபாத்திமா பீவி.