முதலமைச்சருக்கு என்ன கோபம் ? எஸ்.பி வேலுமணி கேள்வி

அதிமுக-வின் 52வது ஆண்டு விழாவை முன்னிட்டு கோவையில் பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளுக்கு முன்னாள் அமைச்சரும் எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி வேலுமணி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதோடு இதய தெய்வம் மாளிகையில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து எஸ்.பி வேலுமணி பேசுகையில், “அதிமுக இயக்கத்தின் 52வது ஆண்டு விழா நிகழ்ச்சி சென்னை எம்.ஜி.ஆர் மாளிகையில் வருங்கால முதல்வர் எடப்பாடியார் சிறப்பாக கொடியேற்றத்தோடு கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக  கோவையிலும் சிறப்பான முறையில் கொடியேற்றி கொண்டாடப்பட்டது” என்றார்.

மேலும் அவர் பேசுகையில், ஆட்சியில் இருக்கும் திமுக  கோவைக்கு  எந்த திட்டமும் வழங்கவில்லை. கோவையில் மேற்கொள்ளப்படும் பணிகளும் தரமற்றதாக காணப்படுகிறது.  தரமற்ற பணியால் கனமழையில் வட்டவழங்கல் அலுவலர் உயிரிழந்தது வருத்தத்தை அளிக்கிறது. மாதம் ஒரு முறை பராமரிப்பு பணிகளை மேற்கொண்டால் தான் இதுபோன்ற விபத்துகளை தடுக்க இயலும்.

கோவையில் 50 ஆண்டுகாலம் இல்லாத வளர்ச்சியை எடப்பாடியார் வழங்கியுள்ளார். எடப்பாடியார் மீது முதலமைச்சருக்கு என்ன கோபம்? எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவிற்கு பிறகு அவர் தான் எங்களுக்கு தலைவர். இதில் குழப்பத்தை உண்டாக்க யார் நினைத்தாலும் எதுவும்  நடக்காது. கூட்டணி குறித்து தெளிவான நிலைப்பாட்டை தெரிவித்த பிறகும் பாஜகவுடன் இணைந்துவிடுவோம் என பேசி வருகின்றனர். அந்த  முடிவில் எவ்வித மாற்றமும் இல்லை.

திமுக போல் நீட் விவகாரத்தில் எடப்பாடியார் நடித்து கொண்டிருக்க மாட்டார். அவர் துரோகங்கள்,  எதிரிகளை முறியடித்து வந்தவர். அவர் முதல்வராகும் போது திமுக தராத திட்டங்களை தருவார் ” என்றார்.