காலமானார் என்.சங்கரய்யா; யார் இவர்?

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவரும், விடுதலைப் போராட்ட வீரருமான என். சங்கரய்யா உடல்நலக்குறைவு காரணமாகச் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று (15 ஆம் தேதி) காலை காலமானார்.  இவருக்கு வயது 102.

யார் இவர்?

தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூரில் 1921 ஆம்  ஆண்டு ஜூலை மாதம் 15 ஆம்  தேதி பிறந்தார். பெற்றோர் அவருக்கு இட்ட பெயர் பிரதாப சந்திரன். ஆனால், தன் தாத்தாவின் மீது கொண்ட பிரியத்தினால் அவரின் பெயரே தனக்கு வேண்டும் என அடம்பிடித்து என். சங்கரய்யா என மாற்றிக் கொண்டார்.

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் 1937 ஆம்  ஆண்டு வரலாற்றுப் பிரிவில் இளங்கலை படிப்பில் சேர்ந்தார்.

இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது, பிரிட்டிஷ் காவலர்களின் மிரட்டலுக்கு அஞ்சாமல் பாதிக்கப்பட்ட மக்கள் பக்கம் நின்றவர். பல முறை சிறையில் இருந்தவர்.

கல்லூரியில் படிக்கும் போதே சுதந்திரப் போராட்டத்தில் தன்னை இனைத்துக் கொண்ட சங்கரய்யா நேதாஜி சுபாஷ் சந்திரபோஸை கல்லூரிக்கு அழைத்து சுதந்திரப் போராட்டக் கூட்டத்தை நடத்தினார்.

சென்னை மற்றும் அண்ணாமலைப் பல்கலைக் கழக மாணவர்களை இணைந்து 1938 ஆம் ஆண்டு சென்னை மாணவர் சங்கம் என்ற அமைப்பைத் தொடங்கியவர்.

கோவில்களில் பட்டியலின மக்கள் நுழையக் கூடாது என்ற கட்டமைப்பை உடைத்து, மக்களுக்காக உரக்கக் குரல் கொடுத்தவர். அன்றே சனாதனத்திற்கு எதிராகக் குரல் எழுப்பியவர்.

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகும் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்த செயல்பாடுகளுக்காகப் பலமுறை சிறை சென்றுள்ளார்.

1964 ஆம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கிய 35 உறுப்பினர்களில் இவரும் ஒருவர்.

மதுரை கிழக்கு தொகுதியில் 1967, 1977 மற்றும் 1980 ஆகிய காலகட்ட தேர்தல்களில் நின்று வெற்றி பெற்றார்.

மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு 1995 ஆம் ஆண்டு கடலூரில் நடந்தது. அம்மாநாட்டில் தமிழ்நாடு மாநிலச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார். அதன் பிறகு 2002 வரை தமிழ்நாடு மாநிலச் செயலாளராகப் பொறுப்பில் இருந்தார்.

மக்களுக்காக இவரின் அயராத சேவையைப் போற்றும் வகையில் தமிழக அரசு சார்பில்  2021 ஆம் ஆண்டு ‘தகைசால் தமிழர்’ விருது வழங்கி கவுரவித்தது.