பறவைக்கு சிறகு போல் மனிதனுக்கு கல்வி!

கோவை கோட்டைமேட்டில் உள்ள மன்ப உல் உலூம் மெட்ரிகுலேசன் பள்ளியில் குழந்தைகள் தினவிழா நடைபெற்றது. நிகழச்சிக்கு பள்ளியின் தாளாளர் மு.சு.சித்தீக். தலைமை தாங்கினார். பள்ளியின் முதல்வர் மும்தாஜ் வரவேற்றுப் பேசினார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட  முன்னாள் மாவட்ட நீதிபதியும் தமிழ்நாடு அரசின் மாநில சட்ட ஆட்சிமொழி ஆணைய உறுப்பினர் முகமது ஜியாவுதீன் சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளான நவம்பர் 14 ஆம்  தேதியை குழந்தைகள் தினமாக இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. அவர் பிரதமராக இருந்தார் என்பதற்காக மட்டும் அவரது பிறந்தநாளை குழந்தைகள் தினமாக கொண்டாடப்படவில்லை.

விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் பிரதமர் சவாலான பணிச் சுமைகளை ஏற்று முன்னேற்ற பாதையில் நாட்டை கொண்டு செல்லும் கடுமையான பணிகளுக்கு இடையிலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் குழந்தைகளோடு செலவிட்டவர். இன்றைய குழந்தைகளே நாளைய இந்தியாவை தீர்மானிக்க போகிறவர்கள் என்றும் குழந்தைகளை வளர்க்கும் முறையைப் பொறுத்து நாட்டின் எதிர்காலம் அமையும் என்ற நம்பிக்கையோடு கடைக்கோடி குழந்தைகளுக்கும் கல்வி போய்ச்சேர வேண்டும் என்று உழைத்தவர்.

அனைத்து கிராமங்களிலும் கல்வி நிலையங்கள் தொடங்கவும் இலவச கல்வி வழங்கவும் திட்டம் தீட்டியவர்.குழந்தைகள் எதிர்கால முன்னேற்றத்தில் அவருக்கு இருந்த அக்கறையையும், குழந்தைகளின் மீது அவருக்கு இருந்த அன்பையும் போற்றும் வகையில் அவரது பிறந்த நாளை இந்தியாவில் குழந்தைகள் தினமாக கொண்டாடுகிறோம்.

ஆசிரியர்கள் வழிகாட்டிகளாக இருங்கள்

உண்மையான கல்வி என்பது பாடப்புத்தகங்களில் மட்டும் இருக்காது. அதற்கு மேலும் கற்றுக்கொள்ள ஏராளம் இருக்கிறது என்பதை இளம் பருவத்திலேயே மாணவர்கள் உணர வேண்டும். ஆசிரியர்கள் அதற்கான வழி காட்ட வேண்டும். புத்தகத்தில் இருப்பதை மட்டும் சொல்லித் தருவது ஒரு நல்ல ஆசிரியரின் வேலை அல்ல. மாணவர்களின் தனித்திறமையை அடையாளம் கண்டு அதனை ஊக்கப்படுத்த வேண்டும். மதிப்பெண் பெறுவது மட்டுமே ஒரு மாணவரை நல்ல மனிதனாக உயர்த்தி விடாது. ஒழுக்கத்தையும் நல்ல பண்புகளையும் இளம் வயதிலேயே கற்றுக் கொள்ள வேண்டும்.

மனித உரிமை என்பதை தவறாக புரிந்து கொண்டு ஆசிரியர்கள் கையில் இருந்து எப்போது பிரம்பு பிடுங்கப்பட்டதோ அன்று முதல் இளைஞர்கள் ஆனதற்கு பிறகு வெளியில் அடி வாங்குகிற சூழ்நிலை உருவாகிவிட்டது. ஆசிரியர்கள் மாணவர்களை தண்டிக்க கூடாது என்று சொல்வது தவறு. கண்டித்து வளர்க்கப்படும் மாணவர்கள் தான் தவறு செய்வதில் இருந்து விலகி இருப்பார்கள்.

நல்ல செயல்களை ஊக்கப்படுத்துவதும் தவறு செய்யும் மாணவர்களை கண்டிப்பதும், தண்டிப்பதும் ஆசிரியரின் கடமை என்பதை பெற்றோர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் குழந்தைகள் நல்ல மனிதர்களாக உருவெடுப்பார்கள் அதே சமயம் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு தாயாக இருந்து அன்பு செலுத்த வேண்டும். ஏழ்மையான குடும்ப சூழ்நிலையில் இருந்து படிக்க வரும் குழந்தைகளை உயர்ந்த மனிதர்களாக உருவாக்க வேண்டிய கடமை ஆசிரியர்களுக்கு உண்டு.

இளம் வயதில் ஒழுக்கத்தையும் நல்ல பண்புகளையும் கற்றுக் கொண்டவர்கள் மட்டும் தான் வாழ்வில் உயர்ந்திருக்கிறார்கள். வறுமையான நிலையில் பிறந்தவர்களை வளர்ந்த மேதைகளாகவும் மேன்மையானவர்களாகவும் உயர்த்துவது கல்வி மட்டுமே. அதேபோல ஒருவேளை வாழ்வில் வீழ்ச்சி வந்தாலும் கீழே விழும் போது தாங்கிப் பிடிப்பதும் கல்வி மட்டும் தான்.

ஒருவரை உயர்த்தும் ஏணியாகவும் விழுந்தால் தாங்கி பிடிப்பதற்கும் பயன்படும் ஒரே ஆயுதம் கல்வி மட்டும் தான். வளர் இளம் பருவத்தில் தினமும் பள்ளிக்கு வருவதும், படிப்பதும், வீட்டுப்பாடம் எழுதுவதும், தேர்வு எழுதுவதும் மாணவர்களுக்கு சிரமமாகத்தான் தோன்றும். ஆனால் இப்போது கசப்பாக தெரிகிற இந்தக் கல்விதான் எதிர்காலத்தில் இனிப்பான வாழ்க்கையை உங்களுக்கு தரும் என்பதை உணர்ந்து கொண்டவர்கள்.

எழுந்து நடக்கத் தொடங்கிய மனிதன்

மாணவர்கள் பாட புத்தகங்களை மட்டுமே படிக்காமல் ஏதாவது நல்ல நூல்களைப் படிக்கும் பழக்கதை இப்போதிருந்தே வளர்த்துக் கொள்ள வேண்டும். பள்ளிக்கூடங்களில் இன்றியமையாததாக இருக்க வேண்டிய ஒன்று நூலகமாகும். ஒரு நல்ல நூலகம் நல்ல பள்ளிக்கூடத்தில் அடையாளமாக இருக்கும்.

ஒவ்வொரு மாணவரும் ஒரு சிறிய புத்தகத்தையாவது வாங்கிப் படித்து அதனை தங்கள் பள்ளி நூலகத்திற்கு வழங்கினால் பல்துறைகளில் சிறப்பு வாய்ந்த புத்தகங்களை அமையப்பெற்ற நூலகம் ஒவ்வொரு பள்ளிகளும் இடம் பெறும். முயற்சி செய்தால் தான் வாழ்க்கையில் முன்னேற முடியும். குத்தவைத்து உட்கார்ந்த மனிதன் குகைக்குள்ளே தான் வாழ்ந்து கொண்டிருந்தான். எழுந்து நடக்கத் தொடங்கிய மனிதன் தான் நாகரீகத்தை உருவாக்கிய முதல் மனிதன்.

இருந்த இடத்திலேயே இருந்து கொண்டிருந்தால் வாழ்வில் எந்த முன்னேற்றத்தையும் அடைய முடியாது. முன்னேறுவதற்கு அடிப்படை கல்வியும் புதிய முயற்சிகளும் ஆகும் என்பதை உணர்ந்து புதிது புதிதாக கற்றுக் கொள்வதற்கும் முயற்சி செய்வதற்கும் மாணவப் பருவத்தில் இருந்து சிந்திக்க வேண்டும்.

எனவே நல்ல நூல்களை படிப்பதன் மூலம் நமது உள்ளத்தில் வேறுபாடுகளை உருவாக்கும் அழுக்குகள் போக வேண்டும். அத்தகைய நூல்களை படிப்பவர்கள் தான் வாழ்வில் உயர்வார்கள். அவர்களால் தான் இந்த நாடும்.

கல்வி மட்டும் தான் ஏற்றத்தாழ்வுகளை போக்கும் ஆயுதம் என்பதால் இந்த குழந்தைகள் தினத்தில் நன்றாக படிக்க வேண்டும் என்று மாணவர்கள் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று பேசினார்