இந்திய பொருளாதாரம்‌ 2030-க்கு பிறகு சவால்களை எதிர்கொள்ள நேரிடும்!

இந்தியாவின்‌ பணவீக்கம் கடந்த காலங்களை ஒப்பிடுகையில் நடப்பு ஆண்டில் 4.8 சதவீதமாக குறைந்தது உள்ளது என மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் வி.அனந்த நாகேஸ்வரன் தெரிவித்தார்.

கோயம்புத்தூர் வர்த்தகம், தொழில் சம்மேளனம் சார்பில் இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி குறித்த கருத்தரங்கம்,  சேம்பர் டவர்ஸில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் வி.அனந்த நாகேஸ்வரன் பங்கேற்றுப் பேசியதாவது:

கொரோனா-வுக்கு பிறகு இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி அடைந்து வருகிறது. அதிலும், தொழில் துறை 50 சதவிகித வளர்ச்சியை எட்டியுள்ளது. கட்டுமான துறை, ரியல் எஸ்டேட் துறை குறிப்பிட்ட தக்க வளர்ச்சியை அடைந்தது வருகிறது. ரயில்வே துறை, விமான போக்குவரத்துத் துறை உள்ளிட்ட பல துறைகளில் இந்தியா முதலீடு செய்து வருகிறது.

பல நகரங்களில் விமான தளங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில்  குறுகிய கால பொருளாதார வாய்ப்புகள் நன்றாக உள்ளது மற்றும் நடுத்தர காலத்தில் வளர்ச்சி 6% மேல் நிலையானதாக இருக்கும். ஆனால், 2030-க்கு பின்னால் சில சவால்களை எதிர்கொள்ள வேண்டி வரும். இந்த ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 6.5% வளர்ச்சியை எட்டுவதற்கான பாதையில் இந்தியா இருப்பதாகக் கூறினார்.  மேலும், இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனை, இருப்பு நிலைகள், பொது உள்கட்டமைப்பு, நிதி முதலியன நிலையான நடுத்தர கால வளர்ச்சியை உறுதி செய்யும்.

கட்டுமானம், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்புகள் அதிகரித்து வருகிறது. 2010 – 2022 இந்தியாவில் தொழிலாளர் உற்பத்தி வளர்ச்சி 5.8 சதவீதமாக உள்ளது. இதே சீனாவில் 5.9 சதவீதமாக இருக்கிறது. இது குறிப்பிடத்தக்க வளர்ச்சியாகப் பார்க்கிறோம் என்றார்.