வைரலாகும் காதல் தி கோர் திரைப்படத்தின் ட்ரெய்லர் 

நடிகர் மம்மூட்டி மற்றும் நடிகை ஜோதிகா இணைந்து நடித்த மலையாள படமான காதல்- தி கோர் படத்தின்ட்ரெய்லர் நேற்று வெளியான நிலையில் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மலையாள சினிமாவின் உச்ச நட்சத்திரங்களுள் ஒருவரான மம்மூட்டியுடன் ஜோதிகா முதன்முறையாகத் திரையில் இணையும்  திரைப்படம் காதல்-  தி கோர்.  இந்நிலையில் பல ஆண்டு இடைவெளிக்குப் பிறகு ஜோதிகா மீண்டும் மலையாள திரைப்படத்தில் நடிப்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2021-ம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்து இந்திய அளவில் கவனத்தை ஈர்த்த தி கிரேட் இந்தியன் கிச்சன் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் ஜோ பேபி,  தற்போது  காதல் – தி கோர் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை மம்முட்டி கம்பெனி மற்றும் வேஃபேரர் ஃபிலிம் இணைந்து தயாரிக்கின்றனர்.

காதலை மையப்படுத்திய குடும்பப் படமாக உருவாகியுள்ள இப்படம் வருகின்ற நவம்பர் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.