கட்டுமான பொருட்களின் விலை உயர்வு  – பி.ஏ.ஐ., ஆட்சியரிடம் கோரிக்கை

கட்டுமான பொருட்களின் சமீபத்திய விலை உயர்வைக் கட்டுப்படுத்த கோயம்புத்தூரில் உள்ள மாவட்ட நிர்வாகத்திடம் இந்திய பில்டர்ஸ் அசோசியேஷன் (பி.ஏ.ஐ.), கோயம்புத்தூர் மையம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பி.ஏ.ஐ. தலைவர் கணேஷ் குமார், முன்னாள் தலைவர் விஸ்வநாதன், செயலாளர் ஜோசப் ஆகியோர் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமாரைச் சந்தித்து மனு அளித்தனர்.

இது குறித்து, கோவை இந்திய பில்டர்ஸ் அசோசியேஷன் தலைவர் கணேஷ் குமார் கூறுகையில், பிப்ரவரி 1 முதல் எம் சாண்டு, பி சாண்டு  (M Sand, P Sand) மற்றும் ஜல்லி  (Jelly) ஆகியவற்றின் விலை கிட்டத்தட்ட 30 சதம் அதிகரித்துள்ளது.  இந்த திடீர் விலை உயர்வு, கட்டுமான நிறுவனங்கள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் கட்டிட உரிமையாளர்கள் மீது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து, ரெடிமேட் கான்கிரீட் மற்றும் ஃப்ளை ஏஷ் செங்கல் போன்ற கட்டுமானம் சார்ந்த தயாரிப்புகளின் விலையும் உயர்ந்துள்ளது.

தொடர்ந்து, கோயம்புத்தூர் மைய இந்திய பில்டர்ஸ் அசோசியேஷன் முன்னாள் தலைவர் விஸ்வநாதன் கூறுகையில், இந்த விலை ஏற்றத்தால், கட்டுமானத் துறையிலுள்ள பலருக்குக் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் கட்டுமான நடவடிக்கைகள் வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளன. இதனால் கட்டுமானத் தொழிலாளர்களுக்கும் பலர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. புதிய திட்டங்கள் ஒத்திவைக்கப்படுவதால், இத்துறையில் மந்தநிலை ஏற்படும். அரசாங்கம் கிரஸ்ஸர் துறையில் உள்ளவர்களுக்குத் தேவையானதைச் செய்து கட்டுமான பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்தி அதன் மூலம் கட்டிடத் துறையை மீண்டும் முன்போல் செயல்பட உதவ வேண்டும் என்றார்.