நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய விஞ்ஞானிகள் யார்?

இயற்பியல், வேதியியல், மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் ஒப்பற்ற ஆய்வு மேற்கொண்டவர்களுக்கும், மனித இனத்திற்கு பயனளிக்கும் தொழில்நுட்பங்கள், கருவிகளைக் கண்டுபிடித்தவர்களுக்கும் மேலும், இந்த சமூகத்திற்குச் சேவை தொண்டாற்றியவர்களுக்கும் வழங்கப்படும் உலகளவில் பெரிதும் மதிக்கப்படும் ஒரு  பரிசுதான் “நோபல் பரிசு” ஆகும்.

அந்த வகையில், அறிவியல் துறையில் முக்கிய பங்காற்றிய மற்றும் நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்ட 6 இந்திய விஞ்ஞானிகளின் கதைகள் இவை.

1.திருவேங்கட ராஜேந்திர சேஷாத்ரி

இந்தியாவின் வேதியியல் தந்தை என்று அழைக்கப்படும் சேஷாத்ரி, இந்தியாவின் ஆர்கானிக் கெமிஸ்ட்ரி பிரிவை நிறுவியவர். இவர், மலேரியா நோய்க்கான எதிர்ப்பு மருந்துகள், தாவர வேதியியல், ஃபிளாவனாய்டுகள், லைகன்கள் மற்றும் பருத்தி பூக்களின் நிறமிகள் போன்ற பல தலைப்பில் ஆராய்ச்சிகள் செய்து வேதியியலில் முன்னோடியாகத் திகழ்ந்தார்.  1966-ஆம் ஆண்டு கரிம சேர்மங்கள் பற்றிய தனது ஆய்வு பணிக்காக வேதியியலுக்கான நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்டார். எனினும் சேஷாத்ரிக்கு நோபல் பரிசு கிடைக்கவில்லை.

2.கோபால சமுத்திரம் நாராயணன் ராமச்சந்திரன்

திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்த இவர், இருபதாம் நூற்றாண்டு இந்திய அறிவியலாளர்களுள் மிக முக்கியமானவர். மூலக்கூறு உயிரியல் இயற்பியல் பற்றிய ஆய்வுக்காக வேதியியலுக்கான நோபல் பரிசுக்கு சர்.சி.வி.ராமனால் பரிந்துரைக்கப்பட்டாலும், நோபல் பரிசு பெறவில்லை.

3.டாக்டர் உபேந்திரநாத் பிரம்மச்சாரி

இந்திய மருத்துவத் துறையில் சிறந்த பங்காற்றியர் டாக்டர் உபேந்திரநாத் பிரம்மச்சாரி. இவரது ஆய்வில் க்வார்ட்டன் மலேரியா நோய் கண்டுபிடிக்கப்பட்டது. இவரது மருத்துவ ஆய்வுப் பணிக்காக 1929 மற்றும் 1942 ஆகிய ஆண்டுகளில் இரண்டு முறை நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்டாலும், அவருக்கு அந்த பரிசு கிடைக்கவில்லை.

4.சத்யேந்திர நாத் போஸ்

மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர் இவர்,  கணித இயற்பியலில் சிறப்புப் பயிற்சி பெற்றவர். போஸ்-ஐன்ஸ்டைன் புள்ளியியல் மற்றும் போஸ் வளிமம் ஆகியவற்றைக் கண்டுபிடித்தார். இதற்காக, நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்டார்.

5.ஹோமி ஜஹாங்கீர் பாபா

இந்தியா இதுவரை கண்டிராத மிகப் பெரிய விஞ்ஞானிகளில் ஒருவராகப் போற்றப்பட்டும் ஹோமி ஜஹாங்கீர் பாபா ஐந்து முறை நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்டாலும், அந்த மரியாதை பாபாவுக்குக் கிடைக்கவில்லை. இருப்பினும், நாட்டின் அணுசக்தி திட்டத்தின் அடித்தளமாக இவர் பணியாற்றியதால் , குவாண்டம் கோட்பாடு மற்றும் காஸ்மிக் கதிர்வீச்சுக்கான அவரது பங்களிப்புகளைப் போலவே அவருக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்தது.

6.மேகநாத் சாஹா

இந்தியாவில் அறிவியல் ஆராய்ச்சித் துறைக்கு அடித்தளம் மிட்ட மேகநாத் சாஹா வானியல் ஆராய்ச்சியிலும்  சிறந்து விளங்கினார். ஜெர்மனி, இங்கிலாந்து, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுக்கு அறிவியல் பயணங்கள் மேற்கொண்ட இவர் 1930, 1937, 1939, 1940, 1951 மற்றும் 1955 ஆம் ஆண்டுகளில் நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்டார்.  இருந்தபோதிலும் நோபல் பரிசு எட்டாக் கனியாகிவிட்டது.