தொடரும் ரயில் விபத்துக்கள்; பாதுகாப்பு முக்கியம்

ஒடிசா மாநிலத்தில் கடந்த ஜூன் மாதம் நிகழ்ந்த ரயில் விபத்தில் 296 பேர் உயிரிழந்தனர். இந்த கோரா ரயில் விபத்தில் தாக்கம் மெல்ல மெல்லக் குறைந்து வந்தது. இந்த நிலையில் மீண்டும் ஒரு கோரா விபத்து ஏற்பட்டு நாட்டு மக்கள் அனைவரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

அண்டை மாநிலமான ஆந்திராவில் விசாகப்பட்டினத்திலிருந்து பலாசா நோக்கிச் சென்ற சிறப்புப் பயணிகள் ரயில், சிக்னல் கிடைக்காமல் கோத்சவத்சாலா அருகே தண்டவாளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அப்போது, அதே வழித்தடத்தில் வந்த குண்டூரிலிருந்து ஒடிசா மாநிலம் ராய்காட் சென்ற பயணிகள் ரயில், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் மீது மோதியது. இதில் 3 பெட்டிகள் தடம்புரண்டன.

சிக்கல் கோளாறு காரணமாக இந்த விபத்து நடந்ததாக முதற்கட்ட விசாரணையில்  தெரிய வந்துள்ளது.  மேலும், இருள் சூழ்ந்த பகுதியில் ரயில் விபத்து நடந்ததாலும், அங்கு மின்சாரக் கம்பிகள் அறுந்து விழுந்ததாலும்  பயணிகள் செய்வது அறியாமல் தவித்தனர். அதன் பிறகு தகவல் அறிந்து அங்கு வந்த மீட்புக்குழுவினர் மற்றும் காவல்துறையினர் பயணிகளை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மீட்டுப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்து உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக்  கூடும்  என்ற அச்சம் எழுந்துள்ளது.

இந்த விபத்து தொடர்பாக அரசியல் தலைவர்கள் தங்கள் கருத்தைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது எகஸ் (ட்வீட்டர்) பக்கத்தில்,  ஒடிசாவில் ஏற்பட்ட பாலசோர் ரயில் விபத்தைச் சுட்டிக்காட்டி, பெரும்பாலான இந்தியர்கள் பொது போக்குவரத்தில் ரயில் பயணத்தையே நம்பி இருக்கின்றனர். இப்படியாக ரயில்வே துறையில் அடுத்தடுத்து நிகழும் விபத்து கவலை அளிக்கிறது என்று விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்ததோடு காயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் அடைய விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அமைச்சர் கனிமொழி ஒடிசாவை தொடர்ந்து, ஆந்திராவிலும் ரயில் விபத்து நிகழ்ந்திருப்பது ரயில்வே துறையின் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் மக்கள் பயன்படுத்தும் ரயில்வே துறையில் பாதுகாப்பு முக்கியம் என்று தனது கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.