மோசமான நிலையில் தமிழகம் எஸ்.பி வேலுமணி குற்றசாட்டு

கோவை புறநகர் தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட அதிமுக பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டம் இதய தெய்வம் மாளிகையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.ஜி அருண்குமார், ஏ.கே செல்வராஜ், தாமோதரன், கந்தசாமி உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,  “அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிக்கும் வேட்பாளர் யாராக இருந்தாலும் அவர் வெற்றி பெறுவார்” என்றார். மேலும் அதிமுக ஆட்சியில் இருந்தபோது பல்வேறு வகையான திட்டங்கள் கொண்டுவரப்பட்டது என்றவர் .., தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் அனைத்து பணிகளும் எடப்படியார் தலைமையில்  நிதி ஒதுக்கி துவக்கப்பட்டது என்று சுட்டிக்காட்டினார்.

மேலும் அவர் கூறுகையில், கோவையில் செயின் பறிப்பு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதாக குறிப்பிட்டார். அதோடு தமிழகம் முழுவதும் மோசமான சூழ்நிலை நிலவுவதாகவும், சொத்து வரி உயர்வு ,மின் கட்டண உயர்வு என மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் எந்த பணியும் நடைபெறுவதில்லை என குற்றம்சாட்டினார்.

ஆளுநர் மாளிகை பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அமைச்சர் ரகுபதியின் கருத்து குறித்து பேசிய அவர், பெட்ரோல் குண்டு வீசப்பட்ட பகுதி எது என்பதை பார்க்க வேண்டும் என்றும், அங்கு மட்டுமின்றி எங்குமே சட்ட ஒழுங்கு சரியில்லை என்றும் விமர்சித்தார். மேலும் இதுபோன்ற சம்பவங்களை அரசு கட்டுப்படுத்த வேண்டும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக இருந்தால் தான் இங்கு பலர் தொழில் துவங்க வருவார்கள் என்றார்.