அறிவின் உலகிற்கு அறிமுகப்படுத்தும் ‘வித்யாரம்பம்’

விஜயதசமி நாள் என்பது நவராத்திரி விழாவின் பத்தாவதும், இறுதி நாளும் ஆகும். பெண் சக்தியை துணையாக கொண்டு நடந்த வதத்தின் இறுதிநாள் வெற்றியை விவரிக்கும் நிகழ்வே விஜயதசமி. கல்வி, கேள்வி, அறிவில் சிறந்து விளங்கவும், தொழில் சார்ந்த புது முயற்சிகளுக்கு பிள்ளையார் சுழி போடவும் இது உகந்த நாள் ஆகும். இந்த நாளில் எது தொடங்கினாலும் வெற்றிகரமாக முடிவடையும் என்பது நம்பிக்கை.

வித்யாரம்பம்

இந்த நன்னாளில்  2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை அறிவின் உலகிற்கு அறிமுகப்படுத்தும் ‘வித்யாரம்பம்’ என்ற நிகழ்வு நடைபெறுவது வழக்கம்.  வித்யாரம்பம் என்பது ஒரு இந்து சடங்கு. இது தமிழ்நாடு, கேரளா, போன்ற மாநிலங்களில்  பாரம்பரியமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

குழந்தைகளுக்கு எழுத்துகளை கற்பிக்கும் முக்கியமான விழாவாக இது பார்க்கப்படுகிறது. மேலும் முறையாக இசை, நடனம், மொழிகள், நாட்டுப்புற கலைகள் போன்றவையும் கற்பிக்கப்படுகின்றன.

அறிவு மற்றும் ஞானத்தின் தெய்வமாக கருதப்படும் சரஸ்வதி தேவிக்கு வித்யாரம்பம் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. ‘வித்யா’ என்றால் கல்வி. அந்த வகையில் கல்வியை சிறப்பான கொண்டாட்டத்துடன் தொடங்க கோயில்களிலும் வீடுகளிலும் வித்யாரம்பம் கொண்டாடப்படுகிறது. அதிலும் கோயில்களுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் வந்து தங்கள் குழந்தைகளை கற்றலில் ஈடுபடுத்துவது வழக்கம்.

 

அரிசியில் முதல் எழுத்து

இந்த சடங்கின்போது ஒரு தட்டில், அரிசியை முழுவதுமாக பரப்பி வைத்துக் கொள்வர். குருவின் முன்னிலையில் குழந்தையின் சுட்டு விரலை பிடித்து, தட்டிலுள்ள அரிசியின் மேல் தங்கள் தாய்மொழியின் எழுத்தை, எழுத வைப்பர். சிலர் தெய்வங்களின் மந்திரத்தை எழுத வைப்பர்.

பின்பு நெல் அல்லது தங்கத்தைக் கொண்டு குழந்தையின் நாவில் எழுதுவார்கள். இதனால் குழந்தை எழுத்துத் திறமையும் பேச்சு திறமையும்  மிகுந்து அறிவாற்றலை பெரும் என்று பெற்றோர்கள் நம்புகின்றனர். பிள்ளைகளின் ஞானத்திற்கு இந்த சுபநிகழ்ச்சி ஒரு ஆரம்பமாக இருக்கட்டும் என்ற முறையில் பாரம்பரியமாக வித்யாரம்பம் உற்சாகத்தோடு கொண்டாடப்பட்டு வருகிறது.

தற்போது வித்யாரம்பம் விழாவானது அனைத்து மக்களாலும் கொண்டாடப்படுகிறது. ஆனால் சடங்குகளில் சிறிய வேறுபாடுகள் இருக்கும். இந்த சடங்கு குறிப்பாக கோயில்களைத் தவிர கேரளம் முழுவதும் பல தேவாலயங்களிலும் செய்யப்படுகிறது.

கோவையில் வித்யாரம்பம்

குழந்தைகள் தங்களது கல்வி பயணத்தை தொடங்கும் விழாவான வித்யாரம்பம் கோவையில் பல்வேறு கோயில்களில் கொண்டாடப்படும். குறிப்பாக சித்தாபுதூர் ஐயப்பன் கோவில் பேர் போன ஒன்று. இக்கோயிலுக்கு கோவையிலிருந்தும், அதனை சுற்றியுள்ள பகுதியிலிருந்தும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வந்து தங்களது குழந்தைகளை ஞானத்தின் பாதைக்கு அறிமுகப்படுத்துவர். குழந்தைகளின் குரல்கள் நிறைந்த வித்யாரம்பமாக சித்தாபுதூர் ஐயப்பன் கோயிலில் விஜயதசமி பெரும் விமர்சையாகக் கொண்டாடப்படும்.