வேண்டுவோருக்கு வேண்டுவன அருளும் “காரண பெருமாள்”

கோயம்புத்தூர் மாவட்டம் சின்னியம்பாளையம் அருகே வெங்கிட்டாபுரம் என்ற இடத்தில் ஸ்ரீ காரண  கரிவரதராஜ பெருமாள் திருக்கோவில் உள்ளது.

காரை வனத்தில் சுயம்புவாக தோன்றிய பெருமாள் என்பதால் “ஸ்ரீ காரண கரிவரதராஜ பெருமாள்” என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்.இத்திருத்தலம் 350 ஆண்டுகள் பழமைவாய்ந்தது. இவரை, காரண பெருமாள் என்றும் பக்தர்கள் அழைக்கின்றனர்.

மேலும், கருவறைக்கு நேர் பின்புறமாக, பூர்வ மூலவர் என்ற திருநாமத்தில் இரு காரை மரங்களுக்கிடையே பெருமாள் சுயம்பு வடிவில் காட்சியளிக்கிறார். உபய நாச்சிமார்களோடு ஸ்ரீ காரணராஜர் உற்சவராக அருள்பாலிக்கிறார். இங்கு மூலவர் மற்றும் உற்சவர் என இருவருக்கும் தனித்தனி பெரிய திருவடிகள் (கருடாழ்வார்) இருப்பது இக்கோவிலின் சிறப்பம்சம்.

கோவில் அமைப்பு

அர்த்த மண்டபத்தில் குறள் காவலப்பர் என்ற  சின்ன பெருமாள் மற்றும் திருமங்கையாழ்வார் உள்ளனர்.  உட்பிரகார சன்னதி ஒன்றின் முன்புறம் சக்கரத்தாழ்வார், பின்புறம் யோகா நரசிம்மர் அமைந்துள்ளது. மேலும், உடல் பிணியைப் போக்கி ஆரோக்கியத்தை மேம்படுத்தும் தன்வந்திரி பகவான் சன்னதி இங்கு அமைந்திருப்பது சிறப்பு. அதுமட்டுமின்றி, ஆஞ்சநேயர் சன்னதியும் உள்ளது.

திருக்கோவில் பின்புறத்தில் நான்கு ஏக்கர் பரப்பளவில் மூலிகை வனம் அமைந்துள்ளது. செஞ்சந்தனம், கதம்பம், ஈட்டி, தேக்கு, காட்டுக்கொன்றை என பலவகையான மூலிகை மரங்கள் உள்ளன. இவ்விடத்தில், சித்திரை மாதத்தில் ராமானுஜர் அவதரித்த திருவாதிரை நட்சத்திர நாளில் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.

7 மணி நேரம் நடக்கும் திருமஞ்சனம்

மாதந்தோறும் வரும் திருவோண நாளில் நடையழகுடன் பெருமாள் புறப்பாடு நடைபெறும். பெருமாளுக்கு உகந்த மாதம் புரட்டாசி என்பதால், சனிக்கிழமைகளில் காரண ராஜருக்கு உற்சவம் சிறப்பாக நடைபெறுவதோடு,  நான்கு நாள் உற்சவமும் நடைபெறும்.

புரட்டாசி கடைசி வெள்ளிக்கிழமையில் காரண ராஜருக்கு திருக்கல்யாண மஹோத்சவம் நடைபெறும். இதற்கடுத்து வரும் நாட்களில், கருட சேவை, திருமங்கையாழ்வாரின் வேடுபறி உற்சவம், பெரிய திருமஞ்சனம் நடைபெறும். திருமஞ்சனம் சுமார் 7 மணி நேரம் பிரமாண்டமாக நடக்கும்.

இங்கு எழுந்தருளியுள்ள பெருமாள், வேண்டுவோருக்கு வேண்டுவனவெல்லாம் அள்ளி வழங்கக் கூடியவர். திருமண தடைகளை நீக்கி கல்யாணப் பாக்கியத்தைக் கொடுத்து, நல்வாழ்வு அளித்து  வந்துள்ளதால் “கல்யாண நாயகன்” என்ற திருநாமமும் பெருமாளுக்கு உண்டு.

நிவர்த்தி வழிபாடுகள்

குழந்தை பாக்கியம் வேண்டும் தம்பதிகள் திருவோண நாளில் தங்கத்தாமரை அர்ச்சனை செய்து வணங்கினால் விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்க பெறலாம் எனக் கூறப்படுகிறது.  மேலும், எட்டு  திருவோண நாளில் பெருமாளை தொடர்ந்து தரிசித்து வந்தால் வாழ்வில் இடர்பாடுகள் நீங்கி பக்தர்களின் பிரார்த்தனைகளை நிறைவேற்றுகிறார் காரண பெருமாள்.