தோல்வியால் கற்கும் பாடம் உயர்விற்கு அவசியமானது

சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளியில் புதன்கிழமையன்று ஆண்டு விளையாட்டு விழா நடந்தது. இதில் பள்ளிச் செயலர் கவிதாசன், நிர்வாக அறங்காவலர் ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இவ்விழாவில்  கோவை மாவட்ட, காவல்துறை கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு முன்னதாக நடந்த விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசளித்தார்.

அதோடு விழாவில் பத்ரிநாராயணன் பேசுகையில், “தோல்வியினால் கற்கின்ற பாடம் நமது உயர்விற்கு அவசியமானது. விளையாட்டு போட்டிகள் வெற்றியையும் தோல்வியையும் ஏற்றுக்கொள்ளக்கூடிய பக்குவத்தை வளர்க்கிறது. அதோடு விடாமுயற்சியையும் கற்றுத்தருகிறது. மாணவர்கள் நிகழ்காலத்தில் கற்றுக்கொள்வதெல்லாம் நிச்சயம் எதிர்காலத்தில் பலன் தரும். எதையும் தள்ளிப்போடாமல் இன்றே முயற்சி செய்ய வேண்டும். தொடர்முயற்சி தான் வெற்றியின் பாதைக்கு அழைத்துச் செல்லும்” என்று மாணவர்களை ஊக்கப்படுத்தினார்.

விழாவின் ஒரு பகுதியாக, பள்ளியில் படிக்கின்ற மாணவர்களின் தம்பி தங்கைகளுக்கும், பெற்றோர்களும் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளியோடு ஜெர்மனி எர்ஃபர்டிலுள்ள கொனிஜென் லூயி ஜிம்னாஷியம் பள்ளி கலாச்சாரப் பரிமாற்ற நிகழ்வை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக கொனிஜென் லூயி ஜிம்னாஷியம் பள்ளியைச் சேர்ந்த மாணவர்களும் போட்டிகளில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

பள்ளி முதல்வர்  உமாமகேஸ்வரி, பள்ளியின் கல்வி ஆலோசகர் கணேசன், துணை முதல்வர் சக்திவேலு, உடற்கல்வி இயக்குநர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் இவ்விழாவில் பங்கேற்றனர்.