‘காட்டின் வளமே நாட்டின் வளம்’

பூமியின் நிலப்பகுதியில் மூன்றில் ஒரு பங்காக காடுகள் உள்ளன. காடுகள் என்பது தாவரங்களையும், விலங்குகளையும் கொண்ட கட்டமைப்பு மட்டுமல்ல. அவை அனைத்து உயிரினங்களின் அடிப்படை ஆதாரமாகவும் விளங்குகிறது. நாம் சுவாசிக்கும் காற்றிலிருந்து உபயோகிக்கும் பொருட்கள் வரை காடுகளை தான் நம்பியுள்ளோம்.

ஒரு நாட்டில் மொத்த நிலப்பரப்பில் அமைந்துள்ள காடுகளின் அளவை பொருத்தே அந்த நாட்டின் வளம் மதிப்பிடப்படுகிறது. அதனால் தான்  ‘காட்டின் வளமே நாட்டின் வளம்’  என அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.

காடுகளின் முக்கியத்துவம்

சுமார் 80 % க்கும் மேற்பட்ட தாவரங்கள், விலங்குகள், பறவைகள், பூச்சிகள் உள்ளிட்டவற்றை காடுகள் கொண்டுள்ளன. வளிமண்டலத்தில் இருக்கும் கார்பன் டை ஆக்சைடை பிரித்தெடுப்பதிலும், ஆக்ஸிஜனின் அளவை பராமரிப்பதிலும் ஒரு நுரையீரல் போல காடுகள் செயல்படுகிறது. காற்றில் கலந்திருக்கும் புகை, தூசு, நாற்றங்கள் போன்ற நச்சுத்தன்மைகளை மரத்தின் இலைகள் வடிகட்டுகிறது.

வனங்களில் காணப்படும் ஆறுகள், ஏரிகள், குளங்கள் போன்ற நீர்நிலைகள் மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் முக்கியமான நீராதாரங்களாக விளங்குகின்றன. காடுகளும் மரங்களும் வளமாக இருந்தால் நமக்கான தண்ணீர் தேவை குறையாமல் இருக்கும். சூரியனின் கதிர்களில் இருந்து நீர் இருப்புகளை காடுகள் பாதுகாத்து நீரை நீண்ட காலம் வரை நீட்டிக்க உதவுகிறது.

மரங்கள் மிகவும் வலுவான வேரைக்கொண்டுள்ளது. ஒவ்வொரு மரத்தின் வேரும் மண்ணை இறுக்கப்பற்றி கொள்கின்றன. கடுமையான மழை, புயல், வெள்ளம் போன்றவற்றால் ஏற்படும் மண்ணரிப்பை காடுகள் தடுக்கின்றன. இதன் மூலம் இயற்கை பேரிடரிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள முடிகிறது.

காடுகள் புவியின் வெப்பத்தன்மையை குறைத்து, மலை மேகங்களை உருவாக்கி, மழை பொழியச் செய்கிறது. மழை பெய்வதால் பூமி குளிர்ச்சி பெற்று விளைச்சலும் அதிகரின்றன. அதோடு நிலத்தடி நீரை சேமிக்கவும், மண் வளத்தை அதிகரிப்பதிலும் மரம் முக்கிய பங்காற்றுகிறது.

அதுமட்டுமில்லாமல் காடுகளில் மருத்துவக் குணமிக்க தாவரங்கள் ஏராளமாக உள்ளன . இந்த தாவரங்களில் இருந்து பிரித்தெடுக்கப்படும் இலைகள்,வேர்கள்,விதைகள் என ஒவ்வொன்றும் நச்சுத்தன்மை அதிகமுள்ள நோய்களை குணப்படுத்தும் ஆற்றலை கொண்டுள்ளது.

இன்று கட்டுமானப்பணிகள் அடைந்துள்ள வளர்ச்சிக்கு மரங்கள் மிகப்பெரிய பங்கு வகிக்கின்றன. தேக்கு, அத்தி, மெராந்தி போன்ற மரத்திலிருந்து நாற்காலி, மேசை,கதவு என ஏகப்பட்ட மரப்பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. மேலும் காகிதம், தீப்பெட்டி போன்ற சிறிய அளவிலான பொருட்களை செய்வது முதல் வீடு, பாலம், கப்பல் போன்ற பெரிய அளவிலான கட்டுமான பணிகள் வரை மரங்கள் பயன்படுகிறது.

காடுகளின் அழிவு :   

இன்னும் ஏராளமான தேவைகளை பூர்த்தி செய்யும் காடுகளின் வளர்ச்சிக்கு மனிதர்கள் பங்கு வகிக்காமல் இருந்தாலும் அதன் அழிவிற்கு முக்கிய காரணமாக இருக்கின்றனர். காடுகள் அளிக்கப்படுவது இயற்கை சீற்றங்கள், பேரழிவுகள் உண்டாவதற்கு வழிவகுக்கும். மனிதர்கள் இல்லாவிட்டாலும் மரங்கள் வாழும். ஆனால் மரங்கள் இல்லாவிட்டால் மனிதர்கள் வாழ முடியாது என்பதே உண்மை. இயற்கை வளங்களை அழிக்காமல் அதன் வளர்ச்சிக்கு உதவுவதே அவசியமான ஒன்று. நம்மை காப்பதோடு சுற்றுசூழலையும் காப்பதால் மட்டுமே எந்த ஒரு பாதிப்பும் இன்றி நாம் வாழ முடியும்.