மத்திய அரசின் திட்டம்.., ஒரேநாளில் 1 லட்சம் பேருக்கு கடன் உதவி! -நிர்மலா சீதாராமன்

கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற்ற மாபெரும் கடன் வழங்கும் விழாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ரூபாய் 3, 749 கோடி மதிப்பிலான கடன் உதவிகளை வழங்கினார்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து கோவை வந்த அவருக்கு பாஜக-வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனையடுத்து, பீளமேடு 27 வார்டு பகுதியில் தூய்மை பாரதம் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதன் பின்னர், அவிநாசி சாலையில் அமைந்துள்ள சிட்பி வங்கியின் புதிய கிளையை திறந்து வைத்தார். பின்னர், கொடிசியா வளாகத்தில் நடைபெற்ற மாபெரும் கடன் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற நிர்மலா சீதாராமன், ரூபாய் 3, 749 கோடி மதிப்பிலான கடன் உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோயம்புத்தூர் தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன், கனரா வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி சத்யநாராயண ராஜு, ஐ.ஓ.பி வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி அஜய் குமார் ஸ்ரீவஸ்தவா, நபார்டு வங்கியின் தலைவர் ஸ்ரீ ஷாஜி, சிட்பி வங்கியின் தலைவர் சிவசுப்ரமணியன் ராமன் மற்றும் எம்எல்ஏ-கள் பொள்ளாச்சி ஜெயராமன், அமுல் கந்தசாமி, ஏ கே செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பிரதான் மந்திரியின் வேலை வாய்ப்பு திட்டம், யோஜனா‌ திட்டம், ஜன்தன் யோஜனா திட்டம், பயிர் காப்பீடு திட்டம், சுரக் ஷா பீமா யோஜனா திட்டம் உள்ளிட்ட திட்டத்தின் கீழ், சுயதொழில் செய்வோர், குறு, சிறு, நடுத்தர தொழில்முனைவோர், வியாபாரிகள், பெண்கள், வேளாண் உற்பத்தி பட்டதாரிகள், மகளிர் சுய உதவிக் குழுக்கள், மாணவர்கள் என, ஆயிரக்கணக்கான பயனாளிகளுக்கு கடனுதவி வழங்கப்பட்டது.

‘அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி பயணிக்கும்’

நிகழ்ச்சியில் பேசிய வானதி சீனிவாசன், தமிழகத்தில் மத்திய அரசின் கடன் உதவி பெரும் முதல் மாவட்டம், இந்தியாவில் மூன்றாவது மாவட்டமாக கோவை தேர்வு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் முயற்சியால் இரண்டு மாதத்தில் இந்த திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது என்றார். மேலும், மத்திய அரசின் இத்தகைய கடன் உதவி திட்டத்தின் பெரும் முயற்சியால் தொழில் நகரமாக விளங்கும் கோவை, தனது அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி பயணிக்கும் என தெரிவித்தார்.

‘தொழில் முனைவோரின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம்’

இவரை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வங்கி கணக்கு வைத்திருக்கும் ஒரு லட்சம் பேருக்கு இன்று ஒரே நாளில் கடன் உதவி வழங்கப்பட்டது. குறிப்பாக 23,800 பேருக்கு சில்லறை கடனாக ரூபாய்.1078 கோடி வழங்கப்பட்டது. பல மக்கள் நலத்திட்டங்களை மத்திய அரசு தொடர்சியாக செயல்படுத்தி வருகின்றது. முன்பெல்லாம், கடன் உதவி பெறுவதற்காக மக்கள் வங்கிகளை அணுகி வந்தனர். ஆனால், பயனாளர்களிடம் நேரடியாக தற்போது வங்கிகள் அணுகி வருகிறது. மத்திய அரசின் திட்டத்தின் கீழ் வட மாநிலங்களில் கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்த குறைந்தது ஆறு மாதக் காலங்கள் ஆகும். ஆனால், தென் மாநிலங்களின் வளர்ச்சிக்காக, தமிழகத்தில் கோவை மாவட்டத்தில் கடன் உதவி திட்டத்தை மத்திய அரசு செய்லபடுத்தி உள்ளது. மேலும், பெண்கள், சுய தொழில் செய்வோர் போன்ற தொழில் முனைவோரின் வளர்ச்சிக்கு பிரதமர் மோடி முக்கியத்துவம் அளித்து வருகிறார் எனக் கூறினார்.

இதில், சுமார் 3000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிகளை கனரா வங்கி மற்றும் மாநில வங்கிகள் குழுமம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிகள் ஒருங்கிணைத்தன. இந்த நிகழ்ச்சிகளை தொடர்ந்து கொடிசியா வளாகத்தில் உள்ள மத்திய அரசின் ராணுவ தளவாட ஆராய்ச்சி மையத்தை பார்வையிட்டார்.

நிகழ்ச்சியில் சலசலப்பு

கடன் வழங்கும் நிகழ்ச்சியின்‌ நடுவே கோவையை சேர்ந்த சதீஸ் என்பவர், தனது தொழில் வளர்ச்சிக்காக வங்கி கடன் பெறுவதற்காக பலமுறை வங்கியை அணுகியதாகவும் ஆனால் வங்கி சார்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவித்தார். இதனையடுத்து, அவரின் கடன் விண்ணப்பங்களை பரிசீலனை செய்தபின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.