80 % மாரடைப்பை முன்கூட்டியே தடுக்க முடியும்

இந்தியாவில் இதய நோய்களால் ஏற்படும் இறப்பு விகிதத்தில் தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 36 சதவிகிதத்துக்கும் அதிகமான இறப்புகள் இதயம் தொடர்பான நோய்களால் ஏற்படுகின்றன என்று பல்கலைக்கழக மருத்துவம் மற்றும் மருத்துவ சிறப்பு இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு காலத்தில் வயதானவர்களுக்கு மட்டுமே இதய நோய் ஆபத்தானதாக கருதப்பட்டது. தற்போது அது இளைஞர்களிடையேயும் ஆபத்தான விகிதத்தில் அதிகரித்து வருகிறது. இந்த ஆபத்தான போக்கைக் கருத்தில் கொண்டு, உலக இதய தினத்தை முன்னிட்டு மருத்துவர்கள், இதயநோய் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் பரப்பி வருகிறார்கள்.

 

இளம் வயதிலேயே ஏற்படுவதன் காரணம் :

பெரும்பாலும் வாழ்க்கைமுறை கோளாறுகளால் தான் இதயத்தில் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இதில் அதிக கொழுப்பு, உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் உடல் பருமன் போன்றவை அடங்கும். புகைப் பிடித்தல், அதிகப்படியாக மது அருந்துதல், உட்கார்ந்த வாழ்க்கை முறை மற்றும் எண்ணெய் நொறுக்குத் தீனிகள் போன்ற ஆரோக்கியமற்ற பழக்கங்கள் இதய நோய்களுக்கு காரணமாகின்றன.

இவை தவிர, பரபரப்பான வாழ்க்கைமுறை, பிறவி கோளாறுகள் ஆகியவை இதய பிரச்சனைகளை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கிறது.

 

கரோனரி  தமனி  நோய் :

இதய நோய்களின் எண்ணிக்கையில், இளைஞர்களிடையே அதிகமாகக் காணப்படும் நோய்களில் ஒன்று கரோனரி தமனி நோய் ஆகும்.

“ஆரோக்கியமான வாழ்க்கை அம்சங்களைப் பற்றி கவனமாக இல்லாதவர்கள் இந்த நோயால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. இதற்கு கரோனரி ஆஞ்சியோபிளாஸ்டி மற்றும் ஸ்டென்ட் பிளேஸ்மென்ட் எனும் சிகிச்சை தேவைப்படும். இது அடைபட்ட இதயத் தமனிகளைத் திறக்கும் குறைந்தபட்ச ஊடுருவும் செயல்முறையாகும்.  இன்று உயிர் உறிஞ்சக்கூடியது ஸ்டென்ட்கள் கிடைப்பதால், சிகிச்சையின் விளைவுகளும் சிக்கல் இல்லாமல்  மாறியுள்ளன” என்று கோவை ஜிகேஎன்எம் மருத்துவர் ராஜ்பால் கே அபைசந்த் கூறினார்.

 

பெருநாடி ஸ்டெனோசிஸ் :

பல ஆண்டுகளாக இந்தியா முழுவதும் அதிக கவனம் செலுத்தி வரும் மற்றொரு இதய நோய் பெருநாடி ஸ்டெனோசிஸ் ஆகும். இது 65 வயதுக்கும் மேற்பட்ட வயதுடையோருக்கும், பிறவி இதயக் குறைபாடுகள் உள்ள இளைஞர்களுக்கும் மிகவும் பொதுவாக காணப்படுகிறது.

“பெருநாடி ஸ்டெனோசிஸ் என்பது ரத்த ஓட்டத்தை கட்டுப்படுத்தும் இதய வால்வு பலவீனமடைதல் அல்லது சுருங்குதல் என்பதாகும். மூச்சுத் திணறல், நெஞ்சு வலி, சோர்வு, தலைசுற்றல் போன்றவை இதன் அறிகுறிகளாகும். சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், இது கடுமையான சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.

இந்த நோய்க்கான பாதிப்பு கோவையில் அதிகமாக உள்ளது. இது விழிப்புணர்வு மற்றும் கவனிப்பின் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது” என்று கோவை கேஎம்சிஹெச் மருத்துவர் தாமஸ் அலெக்சாண்டர் விளக்கினார்.

 

தடுப்பதற்கான வழிகள் :

 

உலக சுகாதார அமைப்பின் 2018-ஆம் ஆண்டின் அறிக்கையின்படி, தெற்காசியாவில் ஏற்படும் மாரடைப்பு மற்றும் பக்கவாதங்களில் 80 சதவீதம் முன்கூட்டியே முற்றிலும் தடுக்கக்கூடியவையாகும்.

ஆரோக்கியமான உணவு மற்றும் உடற்பயிற்சி இதய ஆரோக்கியத்தை ஊக்குவிப்பதற்கு முன்னுரிமை அளிக்கிறது. ஆரம்ப காலத்தில்  கண்டறிதல் மற்றும் சரியான நேரத்தில் கவனிப்பு மூலம்  இதய ஆரோக்கியத்தை காக்க முடியும். எனவே, விழிப்புணர்வை அதிகரிப்பது அவசியமான ஒன்று. இது சிகிச்சைக்கு இணையான ஒன்று.