நோயாளிக்கு மறுவாழ்வு அளித்து கேஎம்சிஹெச் மருத்துவர்கள் சாதனை

54 வயதுடைய வேல்முருகன் என்பவர் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு சாலையில் மயங்கி விழுந்தார். அருகிலிருத்தவர்கள் அவருக்கு முதலுதவி தந்து 15 நிமிடத்தில் கேஎம்சிஹெச் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவர் சுயநினைவு இழந்திருந்ததால் நாடித் துடிப்பு மற்றும் இரத்த அழுத்தத்தை பதிவுசெய்ய இயலவில்லை.

மருத்துவர்கள் பாலகுமாரன், ரமேஷ், குணசீலன், சிவகுமார், திலீபன் மற்றும் யுவராஜ் ஆகியோரை கொண்ட கேஎம்சிஹெச் மருத்துவக் குழுவினர் விரைந்து செயல்பட்டு சிபிஆர் சிகிச்சையை தந்துள்ளனர். பின்பு 15 நிமிடத்தில் ஆஞ்சியோபிளாஸ்டி செய்து அவரது ரத்த ஓட்டம் சீராக்கப்பட்டது. எக்மோ கருவி உதவியுடன் இரத்த அழுத்தம் சீராக்கப்பட்டது.

அடுத்த 24 மணி நேரத்திற்குள் நோயாளியின் உடல்நிலை மேம்பட்டு சுயநினைவு திரும்பியது. மூன்று நாட்களுக்கு பின்பு எக்மோ கருவி அகற்றப்பட்டு ஒரு வாரத்திலேயே சிகிச்சைகள் முடித்து நோயாளி வீடு திரும்பினார்.

இதுகுறித்து கேஎம்சிஹெச் மருத்துவமனை தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் கூறுகையில், “இந்த சம்பவம் சிபிஆர் என்ற முதலுதவி சிகிச்சையின் முக்கியத்துவத்தை விளக்குகிறது. நோயாளிகளின் உயிரை காக்க அவசர சிகிச்சைப் பிரிவு, கேத் லேப், எக்மோ என அனைத்து வசதிகளையும், சிறந்த மருத்துவர்களையும் கேஎம்சிஹெச் மருத்துவமனை கொண்டுள்ளது” என்றார். அதோடு  போர்க்கால அடிப்படையில் விரைந்து செயல்பட்ட மருத்துவக் குழுவினரை பாராட்டினார்.