உலக இதய தினம்  : கோவையில் உண்மையான மனித இதயத்தை கொண்டு கண்காட்சி..! 

உலக இதய தினத்தை முன்னிட்டு கோவை ராமகிருஷ்ணா கல்லூரியில் உண்மையான மனித இதயத்தை கொண்டு கண்காட்சி நடத்தப்பட்டது. இதனை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் தொடங்கி வைத்தார்.

ஆரோக்கியமாக இதயத்தை பாதுகாப்பதற்காகவும், இதய நோய்கள் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கிலும் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் 29ம் தேதி உலக இதய தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி, கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில் இதய அறிவியல் கண்காட்சி நடத்தப்பட்டது.

கண்காட்சியைக் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் மற்றும் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் நிர்மலா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இந்தக் கண்காட்சியில் மருத்துவ மாணவ மாணவிகள் பொதுமக்களுக்கு இதயத்தின் செயல்பாடுகள், பல்வேறு இதய நோய்கள் ஏற்படும் போது அதற்கு சிகிச்சை அளிக்கும் முறை குறித்து செயல்விளக்கம் அளித்தனர். மேலும் உண்மையான மனித இதயம் மற்றும் 5 வயது குழந்தையின் இதயத்தைக் காட்சிப்படுத்தி இதயத்தின் அமைப்பு மற்றும் இதயத்தின் எந்த பகுதிகளில் எல்லாம் பாதிப்பு ஏற்படும் அளவு அதிகம் உள்ளது, அதற்கு மருத்துவக் கருவிகளைப் பயன்படுத்தி எவ்வாறு சிகிச்சை அளிப்பது என்பது குறித்தும் விளக்கம் அளித்தனர்.

இந்த கண்காட்சியானது வரும் அக்டோபர் மாதம் 1ம் தேதி மாலை 4 மணி வரை நடைபெற உள்ளதாகவும், பொதுமக்கள் இந்த கண்காட்சியை இலவசமாகப் பார்வையிடலாம் என்றும் மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.