உலகளவில் வேகமாக வளர்ந்து வருகிறது மருந்தியல் துறை!  

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தாக்கியல் கல்லூரியில் உலக மருந்தாளுநர் தினத்தையொட்டி சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

“மருந்தாளுநர் வலுப்படுத்தும் சுகாதார அமைப்பு- மகத்தான தானம் உடல் உறுப்பு தானமே” எனும் தலைப்பில் திங்கட்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் லட்சுமிநாராயணசாமி தலைமை வகித்தார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், உலகளவில் மருந்தியல் துறை வேகமாக வளர்ந்து வருகிறது. ஆகையால், இத்துறையில் இருக்கும் தொழில்நுட்பங்களை கற்று திறன்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை மாணவர்களிடம் வலியுறுத்தினார். மேலும், ராயல் கேர் மருத்துவமனையின் தலைமை செயல்பாட்டு அதிகாரி கே.டி.மணி செந்தில்குமார் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டு, சுகாதார அமைப்பின் பல்வேறு பகுதிகளில் மருந்தாளுநர்களின் பங்களிப்பைக் குறித்த விழிப்புணர்வைப் பொதுமக்களிடையே அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற திருச்சி அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியர் செல்வமணி, கோவை பசுமை மருந்தகம் இந்தியா பிரைவேட் லிமிடெட் இயக்குநர் பனையப்பன் ஆகியோர், சமுதாய பணிகளில் மருந்தாளுநர்களின் நிலைப்பாடு மற்றும் சம ஆரோக்கியம் என்பதின்  மூலமே சுகாதாரப் பாதுகாப்பை மேம்படுத்த முடியும் என்பதை எடுத்துரைத்துப் பேசினார்கள்.

இதையடுத்து, ஸ்ரீராமகிருஷ்ணா மருந்தாக்கியல் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் மத்தியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர். மேலும், 15 மாணவர்கள் உடல் உறுப்பு தானம் செய்வதாக உறுதியளித்தனர்.

இதில், ராமகிருஷ்ணா மருந்தாக்கியல் கல்லூரியின் மருந்தியல் பயிற்சித் துறைத் தலைவர் ஸ்ரீராம், கல்லூரியின் துணை முதல்வர் கோபால் ராவ், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.