கே. பி. ஆர். பொறியியல் கல்லூரியில் “இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை”

கே.பி.ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை இணைந்து  “இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை” எனும் நிகழ்வை அண்மையில் நடத்தின. இந்நிகழ்விற்கு கே.பி.ஆர். குழுமங்களின் தலைவர் கே. பி. ராமசாமி தலைமை வகித்தார்.

நிகழ்வில் வரவேற்புரை வழங்கிய தமிழ் வளர்ச்சித் துறையின் இயக்குநர் அவ்வை அருள், “இன்றைய மாணவர்கள் தமிழர்களின் மாண்புகளை இலக்கியங்களின் வாயிலாக அறிந்துகொள்ள வேண்டும். இந்த பாசறையின் மூலம் இளைஞர்களை மேலும் மெருகேற்ற முடிகிறது.”என்றும், “தமிழ் வளர்ச்சி துறை சார்பில் நடைபெறும் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் முன்பை விட தற்போது அதிகமானோர் கலந்து கொள்கின்றனர். அதில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு அரசு சார்பில் 15,000 ரூபாய் பரிசு வழங்கப்படுகிறது” என்றும் பேசினார்.

தொடர்ந்து வழக்கறிஞர் இலக்கியச்சுடர் இராமலிங்கம்,  நா. கி. பிரசாத், கவிதாயினி மீ. உமா மகேஸ்வரி, தெ. கணேஷ்குமார்,  வழக்கறிஞர் சிவகுருநாதன், நெல்லை ஜெயந்தா ஆகியோர் சொற்பொழிவாற்றினார்.

கே.பி.ஆர். குழுமங்களின் தலைவர் கே. பி. ராமசாமி பேசுகையில், தனக்கு 1962ல் தமிழ் கற்று தந்த தமிழாசிரியர் சடையப்பனை நினைவு கூர்ந்தார். திருக்குறளை எளிதாக ஞாபகம் வைத்துக்கொள்ள தமிழாசிரியர் கூறிய உதாரணங்களையும், கடினமான இலக்கணப் பாடங்களை எளிமையாக கற்றுத்தந்த முறையையும் விளக்கினார்.அதோடு இவரின் தமிழாசிரியர் போல இன்றைய ஆசிரியர்களும் சிறந்து விளங்கவேண்டும் என்றார். மேலும் இந்நிகழ்வில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினார்.

கே.பி.ஆர்.பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் இராமசாமி, இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பு அலுவலர் கவிஞர் நெல்லை ஜெயந்தா, விஜயா பதிப்பகத்தின் உரிமையாளர் வேலாயுதம் ஆகியோர் இந்நிகழ்வில் பங்கேற்று பேசினர்.