திருத்தம் செய்த சட்டங்களை திரும்பபெற வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டம்

இந்தி, சமஸ்கிருத பெயர் கொண்ட மூன்று புதிய குற்றவியல் சட்ட முன் வரைவு மசோதாவை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி புதனன்று கோவை வழக்கறிஞர்கள் சங்கத்தினர் கோவை மாவட்ட நீதிமன்றம் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சிய சட்டம் ஆகிய மூன்று சட்டங்களையும் மாற்றியமைக்க தற்போது நடந்த நாடாளுமன்ற கூட்டத்தில் வரைவு சட்ட மசோதாக்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளனர். மாற்றியமைக்கப்படும் சட்ட மசோதாக்களின் தலைப்பு பாரதிய நியாய சம்ஹிதா, பாரதிய நாகரிக் சுராக்ஷ சம்ஹிதா, பாரதிய சாக்ஷிய என்று இந்தி, சம்ஸ்கிருத மொழியில் உள்ளது. இந்த மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பபெற வேண்டுமென கோவை வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து கோவை வழக்கறிஞர்கள் சங்க தலைவர் கே.எம்.தண்டபாணி கூறியதாவது, ஒரு மாற்றத்தை கொண்டு வர அதற்கான தேவை இருக்க வேண்டும். எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென திருத்தங்களை கொண்டுவர ஒன்றிய அரசு முயற்சி செய்துள்ளது. ஆண்டாண்டுகாலமாக ஆங்கிலத்தில் இருக்கும் சட்டங்களை வடமொழியில் மாற்ற உள்ளனர். இந்த சட்ட திருத்தங்கள் ஆபத்து மிகுந்ததாக உள்ளது. அவசரமாக திருத்தம் செய்யப்பட்ட இந்த சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று கூறினார்.