ரேஷன் கடைகளில் கியூ ஆர் கோடு மூலம் பணம் செலுத்தி உணவுப்பொருட்களை வாங்கலாம் -அமைச்சர் சக்கரபாணி பேட்டி

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதல்நிலை மண்டல மேலாளர்கள் மற்றும் மாவட்ட வழங்கல் அலுவலர்களின் மாநில அளவிலான பணி முன்னேற்ற ஆய்வு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலை வகித்தார். இதில் கூட்டுறவுத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன், கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார், கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்த்குமார், துணை மேயர் வெற்றிச்செல்வன் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் உடனிருந்தனர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சக்கரபாணி, உணவு வழங்கல் துறை சார்பாக தரமான பொருட்கள் வழங்க முதலமைச்சர் அறிவுறுத்தலின் பேரில் தரமான அரிசியை வழங்கி வருகிறோம். 10 லட்சம் மெட்ரிக் டன் நெல் சேமித்து வைக்கமுயற்சியை மேற்கொண்டு வருகிறோம். ரேஷன் கடைகளில் தரமான பொருட்கள் வழங்கவும் ஆய்வு மேற்கொள்ளவும் தனி குழு அமைக்கப்பட்டுள்ளது. 747 ஆலைகளில் கருப்பு பழுப்பு இல்லாத அரிசையை தரம் பிரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 14லட்சம் பேருக்கு புதிய குடும்ப அட்டை வழங்கப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளில் பயோ மெட்ரிக் மற்றும் கண் ஸ்கேன் மூலம் பொருட்களை வழங்க டெண்டர் விடப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் சிறுதானிய உணவு திருவிழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், அனைத்து ரேஷன் கடைகளில் பணம் இல்லாமல் கியூ ஆர் கோடு மூலம் பண பரிவர்த்தனை செய்து உணவு பொருட்களை பெற, கோவையில் முதற்கட்டமாக துவங்கப்பட்டுள்ளது. 1500க்கும் மேற்பட்ட குடும்ப அட்டை உள்ள ரேஷன் கடைகளை பிரித்து, மேலும் ரேஷன் கடைகள் கட்ட கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் 75சதவீத மனுக்கள் இன்று தீர்வு காணபட்டுள்ளது. கோதுமை பொறுத்தவரை மத்திய அரசு குறைவாக கொடுத்துள்ளதால் தட்டுப்பாடு நிலவி வருகிறது. மண்ணெண்ணெய் மத்திய அரசிடம் இருந்து பெறமுடியவில்லை. தட்டுப்பாட்டை போக்க மண்ணெண்ணெய் வாங்கி மானிய விலையில் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பருப்பு, பாமாயில், சக்கரை உள்ளிட்டவை உற்பத்தி செய்யும் இடத்தில் வாங்கி மானிய அளவில் கொடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஆட்சியில் கடத்தலை தடுக்க சென்னை, மதுரை உள்ளிட்ட இரண்டு இடங்களில் மட்டுமே கூடுதல் போலீஸ் அதிகாரி நியமிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இந்த ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க பல்வேறு மாவட்டங்களில் கூடுதல் எஸ்பி, டிஎஸ்பி அதிகாரி பணி அமர்த்தப்பட்டுள்ளது என்றார்.