மத்திய அரசுக்கு கட்சி பாகுபாடு இல்லை

கோவை பீளமேடு பகுதியிலுள்ள பாஜக மகளிர் அணி மாவட்ட தலைவர் ஜெய் ஸ்ரீ வீட்டு வளாகத்தில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் தெற்கு சட்டமன்ற உறுப்பினரும் பாஜக மகளிர் அணி தேசிய தலைவருமான வானதி சீனிவாசன் கலந்துகொண்டு நடனமாடி ஓனம் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினார்.

இதனைத் தொடர்ந்து வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, கோவையில் மலையாளம் மொழி பேசுகின்ற அதிகமான கேரள மக்கள் தொழில் துறையிலும் கல்வித்துறையிலும் மிகச் சிறப்பான முறையில் தங்களது பங்களிப்பை அளிக்கின்றனர். கேரளாவின் சகோதர சகோதரிகளுக்கு தமிழக முதல்வர் கூட ஓனம் திருநாளில் மலையாளத்தில் வாழ்த்து சொல்லி இருக்கிறார்.

ஆனால் தீபாவளிக்கும் முதல்வர் வாழ்த்து கூறினால் அனைவருக்குமான முதல்வராக செயல்படுகிறார் என்பதற்கு அத்தாட்சியாக இருக்கும் என்றும், கைத்தறி ஆடைகளை பிரபலப்படுத்தவும் நெசவாளர்களுக்கு உதவி செய்யும் வகையிலும் இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் ஃபேஷன் ஷோ ஆறு வருடமாக செய்து வருகிறோம் என்று கைத்தறி ஆடை ஃபேஷன் ஷோ குறித்தும் பேசினார்.

கோவை மேயர் குடும்பத்தினர் பற்றிய குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த வானதி சீனிவாசன் மேயர் என்பவர் மாநகராட்சியின் அதிகாரம் வாய்ந்த பொறுப்பு உடையவர். அவரது குடும்பத்தினரின் மீது எழும் புகார் குறித்து மாநில அரசு தீவிரமாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

மேலும் அவர் பேசுகையில் மத்திய அரசு நடவடிக்கை என்பது கட்சி சார்பற்றது.யாருக்கு எதிராக ஆதாரங்கள் இருக்கிறதோ, யாருக்கு எதிராக சாட்சியங்கள் இருக்கின்றதோ அதை வைத்து தான் மத்திய அரசு ஏஜென்சிகள் நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த கட்சி இந்த கட்சி என்று பாஜக விற்கு எந்த பாகுபாடும் இல்லை என்று கூறினார்.