என்.ஜி.பி தொழில்நுட்ப கல்லூரி சார்பில் அகில இந்திய கருத்தரங்கு

என்.ஜி.பி தொழில்நுட்ப கல்லூரியின் செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல் துறை மற்றும் இன்ஸ்டிடியூஷன் ஆஃப் இன்ஜினியர்ஸ், கோயம்புத்தூர் லோக்கல் சென்டருடன் இணைந்து ஆகஸ்ட் 17, 18 ஆம் தேதியில் “அடுத்த தலைமுறை நெட்வொர்க்குகளுக்கான திரள் நுண்ணறிவு” என்ற தலைப்பில் அகில இந்திய கருத்தரங்கை இரண்டு நாட்களுக்கு நடத்தியது.

இக்கருத்தரங்கு தொடக்கத்தில் இன்ஸ்டிடியூஷன் ஆஃப் இன்ஜினியர்ஸின் முன்னாள் தலைவர் நடராஜன் வாழ்த்துரை வழங்க, துறைத் தலைவர் கார்த்திகேயன் வரவேற்புரை அளித்தார்.

முதல் நாள் கருத்தரங்கில் ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் துறைத் தலைவர் வெங்கட லட்சுமி,  பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரியின் தகவல் தொழில்நுட்பத் துறைத் தலைவர் உமாமகேஸ்வரி ஆகியோர் அடுத்த தலைமுறை ஏஐ(AI)யை ஊக்குவிப்பது குறித்தும், திரள் நுண்ணறிவின் எதிர்கால பயன்பாடுகள் குறித்தும்  உரைகளை வழங்கினர்.

இரண்டாம் நாள் காலை கருத்தரங்கில் காருண்யா பல்கலைக்கழக பேராசிரியர் கிரேஸ் மேரி கனகா மற்றும் ஸ்ரீ ஈஷ்வர் பொறியியல் கல்லூரியின் பேராசிரியர் ஆனந்தகுமார் ஆகியோர் பட்டாம்பூச்சி தேர்வுமுறை அல்கோரிதம்(BOA) பற்றியும், அறிவாற்றல் வானொலி நெட்வொர்க்குகள் குறித்தும் உரை ஆற்றினர் .

அதனைத் தொடர்ந்து, பிற்பகலில் வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியைச்  சேர்ந்த மூத்த பேராசிரியர் கண்ணன் மற்றும் என்.ஜி.பி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியலின் துறைத்தலைவர் கார்த்திகேயன் ஆகியோர் உகந்த பாதுகாப்பான ரூட்டிங் பற்றியும் க்ளோவார்ம் திரள் நுண்ணறிவு ஆப்டிமைசேஷன் குறித்தும் விளக்கினர்.

இக்கருத்தரங்கின் இறுதியில் தலைமை விருந்தினர் கண்ணன் மற்றும் கல்லூரி முதல்வர் பிரபா ஆகியோர் உரை நிகழ்த்தி சான்றிதழ்களை வழங்கினர். தொடர்ந்து  செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் துறை உதவிப் பேராசிரியர் கற்பகவடிவு கூட்டத்திற்கு நன்றியுரை வழங்கினார்.

இதில் பல்வேறு பொறியியல் கல்லூரிகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.