குப்பைமேட்டை நந்தவனமாக்கிய தேன்மொழி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த தேன்மொழி என்பவர் குப்பையாக காட்சியளித்த ரிசர்வ் சைட் இடத்தை நந்தவனமாக மாற்றியுள்ளார்.

நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் இவரது குடியிருப்பைச் சுற்றி வசித்து வருகின்றன. இந்த பகுதியில் 50 சென்ட் பரப்பளவில் ரிசர்வ் சைட் உள்ளது. பொதுவாக ஒவ்வொரு பகுதிகளுக்கும் ஒதுக்கப்பட்டிருக்கும் ரிசர்வ் சைட்டுகள் அந்த பகுதி மக்களின் பொதுப் பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட வேண்டும். தேன்மொழியின் இல்லத்திற்கு அருகில் இருந்த ரிசர்வ் சைட் பராமரிப்பு இல்லாமல் குப்பைகள் கொட்டும் இடமாகவும், சமூக விரோதிகளின் கூடாரமாகவும் இருந்து வந்தது.

அந்த பகுதியை கடந்த ஒரு ஆண்டுக்கு முன் சிறுதுளி என்ற தன்னார்வ அமைப்புடன் இணைந்து தேன்மொழி ரிசர்வ் சைட்டை மீட்டு அங்கு பூங்கா அமைத்துள்ளார். இந்த பூங்காவில் மரக்கன்றுகள், பூச்செடிகள், பழ வகைகள் மற்றும் காய்கறி வகைகள் என 275 வகை தாவரங்கள் நடப்பட்டுள்ளன. ஏராளமான பழ வகை மரங்களும் இங்கு பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நந்தவனத்தைச் சுற்றி பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ளவும், அமர்ந்து படிப்பதற்கான அமைப்புகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தேன்மொழி இயற்கை மீது கொண்ட ஆர்வத்தை பார்த்த பலரும் தற்போது இந்த நந்தவனத்தில் தன்னார்வலர்களாக வந்து பணிகள் செய்கின்றனர்.வீட்டிற்குள்ளேயே முடங்கி, அருகில் இருப்பவர் பெயர் கூட தெரியாமலும், இவ்வழியாகச் சென்றால் பாதுகாப்பே இல்லை என்றும் அஞ்சிய வயதானவர்கள், தற்போது அருகில் வசிப்பவர்களோடு இந்த பூங்காவில் அமர்ந்து அரட்டை நடத்தி வருகின்றனர்.

மேலும் தேன்மொழி கோவையில் இதே போல் பல இடங்களிலும் இது போன்று இயற்கைக்கு முக்கியத்துவம் அளிக்கும் தனது சேவையை மேற்கொண்டு வருகிறார்.