ஈரோடு கிழக்கு தரும் எச்சரிக்கை மணி!

தமிழ்நாட்டில் நடைபெற்ற பொதுத்தேர்தல்களை விட சில இடைத்தேர்தல்கள் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறுவது உண்டு. தற்போது நடந்து முடிந்துள்ள ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், அப்படிப்பட்ட ஒன்றாக மாறி இருக்கிறது. ஏனென்றால் திருமங்கலம் ஃபார்முலா என்று குறிப்பிடப்படும் பல சித்து வேலைகள் இந்த முறை உச்சத்தை எட்டி இருக்கின்றன. ஜனநாயக முறைப்படி நடக்கும் தேர்தலில் நாளாக நாளாக பணத்தின் தலையீடும், திருவிளையாடல்களும் அதிகரித்துக் கொண்டே போகின்றன. இந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலிலும் இது அப்பட்டமாக வெளித் தெரிகிறது.

ஏற்கனவே இங்கு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப் பட்டிருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஈ.வெ.ரா. திருமகன் மரணமடைந்ததால் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அவரது தந்தை ஈ.வி.கே.எஸ். இளங்கோவனையே வேட்பாளராக காங்கிரஸ் கட்சியும் அறிவித்திருக்கிறது. இந்த ஒரு தொகுதி இடைத்தேர்தல் என்பது எண்ணிக்கை அடிப்படையில் நேரடியாக எதையும் தீர்மானிக்க முடியாது. என்றாலும் தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் இதில் காட்டிய ஆர்வமும், ஈடுபாடும் மிக அதிகம் என்றே சொல்ல வேண்டும்.

அதிலும் தமிழகத்தின் முக்கிய கட்சிகளான திராவிட முன்னேற்றக் கழகமும், அண்ணா திராவிட முன்னேற்ற கழகமும் தேர்தல் களத்தில் பணியாற்றிய விதம் பற்றி ஊடகங்களில் வெளியான செய்திகள் பொதுமக்களையும், நல்ல உள்ளம் படைத்தோரையும், மக்களாட்சி முறையில் நம்பிக்கை கொண்டவரையும் அதிர வைத்திருக்கிறது.

கடந்த இரண்டு ஆண்டு காலத்தில் நடந்த திமுக அரசின் செயல்பாடுகளைப் பற்றிய மக்களின் எண்ணத்தை அறிந்து கொள்ள இந்த இடைத்தேர்தல், அந்த கட்சிக்கு ஒரு வாய்ப்பு. அதைப்போலவே தமிழ்நாட்டின் முக்கிய எதிர்க்கட்சியான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு இந்த தேர்தல் ஒரு முடிவை மறைமுகமாக வழங்கியிருக்கிறது. எடப்பாடி பழனிச்சாமி, ஓ. பன்னீர்செல்வம் என்று இரு பிரிவுகளாக செயல்பட்டுக் கொண்டிருந்த அதிமுக கட்சியைப் பொறுத்தவரை, இபிஎஸ் தான் அதிமுக என்று இந்த தேர்தலில் வரையறுக்கப்பட்டிருக்கிறது. இது எடப்பாடி பழனிச்சாமிக்கு பெரும் வெற்றியாகவே கருதப்படுகிறது.

ஆனால் இந்த இரு பெரும் கட்சிகள் இடைத்தேர்தலில் களம் ஆடிய விதமும், களத்தில் பாய்ந்த பணமும், பரிசு பொருட்களும், நடுநிலையாளர்களையும், ஜனநாயகத்தை நம்புபவர்களையும் நிலை குலைய வைத்திருக்கின்றன.

ஒரு வாக்குக்கு இவ்வளவு ஆயிரம் ரூபாய் என்பதும், வெள்ளி கொலுசு, வெள்ளி விளக்கு, ஸ்மார்ட் வாட்ச் என்று பரிசு பொருட்கள் வழங்கப்பட்ட செய்திகளும் பல ஊடகங்களிலும் விவாதிக்கப்பட்டன. ஆனால் எல்லாமே காற்றோடு போனது போல் இருக்கிறது. தேர்தல் ஆணையம், தேர்தல் பார்வையாளர்கள், தேர்தல் விதிமுறைகள் எல்லாம் என்ன ஆயின என்று யாருக்கும் தெரியவில்லை.

இதில் யார் குற்றம் செய்தவர் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. சட்டவிரோதமாக கொடுத்தவர்கள் வாங்கியவர்கள் இருவருமே ஜனநாயகத்தின் முன் குற்றவாளிகள் தான். ஒரு ஜனநாயக நாட்டில் நடக்கும் தேர்தலில் இது போன்ற செயல்பாடுகளை ஊக்குவித்தால் அது ஜனநாயகத்திற்கு என்றுமே நல்லது அல்ல.

ஒரு காலத்தில் மாபெரும் தலைவர்கள் இருந்தார்கள். தங்களது கொள்கையை எடுத்துக்கொண்டு மக்களிடம் சென்றார்கள். தேர்தலில் கருத்துகள் மோதின. சூறாவளி பிரச்சாரங்கள் இருந்தன. தேர்தல் நடைமுறைச் செலவுகளுக்கு வேண்டுமானால் பணம் செலவு செய்யப்பட்டிருக்கலாம். ஆனால் இதுபோல பணத்தை கொடுத்தும், பரிசு பொருட்களை கொடுத்தும் வாக்குகளை அபகரிக்கும் நிலை இருந்ததில்லை.

இந்த நிலையில் கோடிக்கணக்கான பணத்தை முதலீடு செய்து லாபத்தை பார்க்க எண்ணும் அரசியல்வாதிகள், எப்படி மக்கள் நலப் பணிகளை மேற்கொள்ள முடியும் என்று வாக்காளர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். ஏனென்றால் கைநீட்டி காசு வாங்கி, தங்களது வாக்குகளை விற்று விட்ட மனசாட்சி இல்லாத மக்கள், எவ்வாறு மக்கள் நல பணிகளை எதிர்பார்க்க முடியும்?

கோடிக்கணக்கான பணத்தை முதலீடு செய்து, அதில் லாபக் கணக்கு பார்த்து பொருளீட்டுவது வணிகத்துக்கும், தொழிலுக்கும் சரியாக இருக்கலாம். ஜனநாயகத்துக்கு அது என்றும் பொருந்தாது.  ஏனென்றால் ஜனநாயகம் என்பது மக்களுக்காக, மக்களால், மக்களுடையது எனும் மாண்பு உடையது. அந்த மாண்பை காக்கப் போகிறோமா அல்லது அழிக்கப் போகின்றோமா என்பதே நம் முன் இன்றுள்ள கேள்வி!