இ(எ)டைத்தேர்தலா?

ஈரோடு கிழக்கு தொகுதியில் நடந்தது இடைத்தேர்தலா அல்லது ஆளும் கட்சிக்கான எடைத் தேர்தலா என்ற கேள்விக்கு விடை கிடைத்ததோ இல்லையோ, மக்களை எடைபோடும் தேர்தலாக மாறிவிட்டது என்றே கூறலாம்.

கடந்த 1980 முதல் தமிழகத்தில் நடந்த பல்வேறு இடைத்தேர்தல்களில் ஒன்றிரண்டு இடங்களில் எதிர்கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன. 1991 க்கு பிறகு இடைத்தேர்தல்கள் வந்தாலே தங்களது கௌரவத்துக்கான தேர்தல்   போல ஆளும் கட்சியின் முதலமைச்சர்கள் முடிவு செய்து தேர்தல் பணியாற்றத் தொடங்கிவிட்டனர். 1991 முதல் 1996 வரையிலான ஜெயலலிதா ஆட்சியில் மொத்தம் நடந்த 5 இடைத்தேர்தல்களில் 4 இல் ஆளும் கட்சியும், ஒன்றில் எதிர்கட்சியான திமுகவும் வெற்றிபெற்றது.

அதேபோல, 1996 முதல் 2001 வரை நடந்த மு.கருணாநிதி ஆட்சியில் 8 இடைத்தேர்தல்களில் 6 இல் திமுகவும், 2 இல் அதிமுகவும் வெற்றிபெற்றன. 2001 முதல் 2006 வரை ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில்   8 இடைத்தேர்தல்கள் நடந்ததில் 7 இல் அதிமுகவும், ஒன்றில் திமுகவும் வெற்றிபெற்றன.

ஆனால், 2006 க்கு பிறகு தமிழகத்தில் இடைத்தேர்தல் என்றால் ஆளும்கட்சி மட்டுமே வெற்றி பெறுவது என்ற நிலை உருவாகிவிட்டது. இதற்கு அரசு இயந்திரத்தை ஆளும்கட்சி தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதே காரணம் என எதிர்கட்சிகள் புகார் கூறிவருகின்றன. வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள், மது கொடுத்து ஓட்டு வாங்குவதாக ஒவ்வொரு தேர்தலின்போதும் பரவலான குற்றச்சாட்டு எழுகிறது.

1993 இல் அதிமுக ஆட்சியில் நடந்த ராணிப்பேட்டை இடைத்தேர்தலில் லட்டில் மூக்குத்தி வைக்கப்பட்டும், வாக்காளர்களுக்கு ரூ.500 ம் விநியோகம் செய்யப்பட்டது. பின்னர் 2003 இல் அதிமுக ஆட்சியில் நடந்த தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் இடைத்தேர்தலில் வழிபாட்டுத்தலங்களுக்கு லட்சக்கணக்கில் தொகை, எதிர்கட்சியில் கிளைச்செயலர்கள் முதல் மாவட்ட நிர்வாகிகள் வரை வளைத்து போடுவது என புதிய உத்திகள் கையாளப்பட்டன.

இருப்பினும், 2008 இல் திமுக ஆட்சியில் நடந்த திருமங்கலம் இடைத்தேர்தலில் தான் ஓட்டுக்காக வாக்காளர்களுக்கு அதிகமான தொகை வழங்கப்பட்டது. அதுவே ‘திருமங்கலம் பார்முலா’ என்ற பெயரில் தொடர்கதையாகி விட்டது. அதன்பிறகு, பொதுத்தேர்தலிலும் இந்த நடைமுறையை கட்சிகள் பின்பற்றத் தொடங்கிவிட்டன. இடைத்தேர்தல் வந்தால் பண மழை பொழியும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் ஏற்பட்டுவிட்டது.

தமிழகத்தில் கடந்த 1980 முதல் இதுவரை வரை மொத்தம் 53 இடைத்தேர்தல்கள் நடந்துள்ளன. இதில் 44 ல் ஆளுங்கட்சி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன. மீதி 8 இடங்களில் எதிர்கட்சிகள் வென்றுள்ளன. ஒன்றில் அதாவது சுயேச்சையாக டி.டி.வி.தினகரன்  வெற்றிபெற்றார்.

கடந்த 2004 ல் அதிமுக ஆட்சியின்போது, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ராஜினாமா செய்ததால், மங்களூர் (தனி) தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது. இதில் திமுக சார்பில் போட்டியிட்ட வெ.கணேசன் 61,956 வாக்குகள் பெற்று ஆளும் அதிமுக வேட்பாளரான கே.ராமலிங்கத்தை (48,070) வீழ்த்தி வெற்றிபெற்றார். தமிழகத்தில் எதிர்கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றது இதுதான் கடைசி. அதன் பிறகு தினகரன் சுயேச்சையாக வெற்றிபெற்றது திருப்புமுனை இடைத்தேர்தலாக இருந்தது.

2006 முதல் 2011 வரையிலான தி.மு.க. ஆட்சி காலத்தில் நடந்த 11 இடைத்தேர்தல்களிலும் தி.மு.க.வே வென்றது. இதேபோல் 2011 முதல் 2016 வரை நடந்த 7 இடைத்தேர்தல்களிலும் அப்போதைய ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வே வென்றது.

ஆளுங்கட்சியே வெல்வது ஏன்?

வாக்கு சதவீதம் அதிகரிப்புக்கு மிக முக்கிய காரணங்கள் இரண்டு. முதலாவது அதிகபடியான கவனம் இடைத்தேர்தல் நடக்கும் தொகுதியில் குவிக்கப்படுவது. ஓரிரு தொகுதியில் இடைத்தேர்தல் நடக்கும் போது, கட்சியின் ஒட்டுமொத்த நிர்வாகிகளும் அங்கு களமிறங்கி தேர்தல் வேலைகளை தீவிரப்படுத்துவார்கள். 100 மக்களுக்கு ஒரு நிர்வாகி என்ற வகையில், தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள். அந்த 100 பேரை வாக்களிக்க வைப்பதே அவர்களுக்கான வேலை என்பது வாக்கு சதவீதம் அதிகரிக்க முக்கிய காரணம்.

அடுத்து பணம். வாக்காளர்களை கவர, பணம் கொட்டி கொடுக்கப்படுகிறது. வெற்றியை தொடர ஆளுங்கட்சியும், நாங்களும் களத்தில் இருக்கிறோம் என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் எதிர்கட்சியும் இருப்பதால் இரு கட்சிகளும் பணத்தை கொட்டிக்கொடுக்கிறார்கள். இந்த இரண்டும் தான் வாக்குப்பதிவு அதிகரிக்க மிக முக்கிய காரணம். மற்றபடி வாக்குப்பதிவு அதிகரிப்பது என்பது மக்களால் தன்னிச்சையாக எடுக்கப்பட்ட முடிவல்ல.

இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியின் பண பலம், அதிகார பலத்துடன் போட்டியிட்டு வெல்வது என்பது சிக்கல் தான். வழக்கம் போல இந்த தேர்தல் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக அமைந்துள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதியிலும் அதே வரலாறு தான் திரும்பியுள்ளது. ஆளும் கட்சியின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 1,10,156 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றுள்ளார்.  அதிமுக வேட்பாளர் கே.எஸ். தென்னரசு 43,923 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவியுள்ளார். அதிமுகவை காங்கிரஸ் சுமார் 40 சதவீத வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளது.

இதுவரை இல்லாத அளவுக்கு ஈரோடு கிழக்கு தொகுதியில் கூடார பார்முலாவை திமுக அமல்படுத்தியது என எதிர்கட்சிகள் குற்றஞ்சாட்டினாலும், ஆளும் கட்சிக்கு இணையாக அதிமுகவும் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருளை அள்ளி வீசின. இதில் நாம் தமிழர் கட்சி மட்டுமே வாக்குக்கு பணம் கொடுக்காமல் 10,827 தூய வாக்குகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.  இடைத் தேர்தலில் ஆளும் கட்சி தான் வெற்றிபெறும் என்ற எழுதப்படாத வாக்கு ஈரோடு கிழக்கில் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

கடினமான சூழல்

இது குறித்து அரசியல் விமர்சகர் ரிஷி கூறும்போது: ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் முடிவு என்பது எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் பாராளுமன்றத்தில் அணி அமைவதை கேள்விக்குறி ஆக்கி உள்ளது. குறிப்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், ஆளுங்கட்சி, ஆண்ட கட்சி இரு கட்சிகளும் பணம் கொடுத்துள்ளது எனக் கூறியுள்ளார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலையோ ஆளுங்கட்சி பலமாக இருக்கிறது என்பதை ஒப்புக் கொள்வது போல பேசி உள்ளார். அதிமுக மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், டெபாசிட் கிடைத்திருக்கிறது என கூறியுள்ளார். இத்தகைய சூழலில் அனைவரும் ஒன்றிணைந்து பாராளுமன்றத் தேர்தலை சந்திப்பது கடினமாகவே உள்ளது.