உலக பக்கவாத தினம் 2022: விரைந்து செயல்பட்டால் பல விளைவுகளை தவிர்க்கலாம்!

– கே.ஜி மருத்துவமனை மருத்துவர்கள் அறிவுரை

நாம் மூச்சு விடுவதில் இருந்து இந்த நொடி நாம் செய்துக் கொண்டிருக்கும் செயல் எல்லாவற்றுக்குமே மூளை தான் காரணமாக உள்ளது. உணர்வு குறித்த விஷயத்தில் மூளையின் செயல்பாடு மற்றும் உலகில் நம்மைச் சுற்றியுள்ள விஷயங்களைப் பார்த்து, அதனை புரிந்து கொள்வதில் நரம்பு மண்டலத்தின் செயல்பாடு முக்கியமாக உள்ளன. ஆனால் இவை இரண்டையும் பாதிக்கும் ஆபத்தான நோயாக பக்கவாதம் உள்ளது.

உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் 6 கோடி பேரும், இந்தியாவில் 6 லட்சம் பேரும் பக்கவாத நோயால் பாதிக்கப்படுகின்றனர் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கிறது. அதில் ஒன்றரை கோடி பேர் மரணம் அடைகின்றனர்.

ஆண்டிற்கு ஆண்டு பக்கவாத நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. ஆனால் இந்நோய் பற்றிய போதிய விழிப்புணர்வு மக்களிடம் இல்லை என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 29 ஆம் தேதி உலக பக்கவாத தினமாக அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி பக்கவாதம் ஏற்பட காரணம், அறிகுறிகள், சிகிச்சைகள் உள்ளிட்ட பல தகவல்களை கே.ஜி மருத்துவமனையின் மருத்துவர்கள் பகிர்ந்து கொண்ட தகவலை இங்கு காண்போம்.

 எந்த வயதினருக்கும் பக்கவாதம் வரலாம்!

– டாக்டர் பக்தவத்சலம்

தலைவர், கே.ஜி.மருத்துவமனை

மூளைக்கு செல்லும் ரத்தக்குழாயில் ரத்தக்கசிவு ஏற்படுவது மற்றும் மூளைக்கான ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்படுவது ஆகிய இருகாரணங்களால் பக்கவாத பாதிப்பு ஏற்படுகிறது.

ஒருவருக்கு பக்கவாதம் ஏற்படும்போது உடலில் உள்ள பாகங்கள் செயல்பாட்டை இழந்து அசைவற்ற நிலைமைக்கு மாறிவிடுகிறது. தலைவலி, பார்வையில் பிரச்சினை ஏற்படுவது, திடீர் மயக்கம், கை, கால்களில் தளர்ச்சி, உணர்ச்சிக் குறைவு, மரத்துப் போதல், பேச்சுக்குழறல், நடக்க முடியாமை, முகத்தில் ஒரு பகுதி மட்டும் அசைவுகளற்று போவது போன்றவை இந்த நோய் தாக்குவதைக் காட்டும் உடனடி அறிகுறியாகும்.

எனவே இந்த அறிகுறிகள் ஏற்பட்டால் தாமதிக்காமல் விரைவிலேயே மருத்துவமனைக்கு சென்றுவிட வேண்டும். இதற்கான சிகிச்சையை உடனடியாக துவங்கினால் தான் பக்கவாதத்தில் இருந்து எளிதில் மீள முடியும். நோயாளி மருத்துவமனைக்கு செல்ல தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் மூளையில் உள்ள செல்கள் இறக்கின்றன. பக்கவாதத்தினை சி.டி.ஸ்கேன் மற்றும் எம்.ஆர்.ஐ ஸ்கேன் பரிசோதனை மூலம் துல்லியமாக கண்டறிந்து விடமுடியும்.

இந்நோய் எந்த வயதினருக்கும் வேண்டுமானாலும் வரலாம். அதிக அளவு ரத்த அழுத்தம், கட்டுப்பாடற்ற சர்க்கரை நோய், புகைபிடித்தல், தேவையற்ற கொழுப்பு உடலில் தேங்குவது ஆகியவை தான் பக்கவாதம் வர காரணமாக உள்ளது. மேலும் ஒருவருக்கு இந்நோய் மிகவும் மோசம் அடைந்தால் பிறரின் துணை கொண்டே வாழ்க்கையை எதிர்கொள்ள வேண்டிவரும். எனவே பக்கவாதம் வரமுக்கிய காரணமாக உள்ள ஆபத்துக் காரணிகளை கட்டுக்குள் வைத்திருப்பது அவசியம்.

பக்கவாதம் ஏற்பட்ட பின்பு தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடத்திற்கும் மூளையில் இரண்டு மில்லியன் நியூரான்களை இழக்கிறோம். எனவே நேரம் கடத்தாமல் உடனடியாக மருத்துவமனைக்கு செல்லவேண்டும் என்ற நோக்கில் உலக பக்கவாத அமைப்பு 2022 ஆம் ஆண்டிற்க்கான கருப்பொருளாக “#Precioustime” (பொன்னான நேரம்) என்பதை கொண்டுள்ளது. 

பொன்னான நேரத்தை தவறி விடாதீர்கள்!

– டாக்டர் ராமகிருஷ்ணன்

நரம்பியல் சிகிச்சை நிபுணர்

பக்கவாதத்திற்க்கான அறிகுறிகள் இருப்பின் (நிலை தடுமாற்றம், கண் பார்வை இழப்பு, முகம் கோணுதல், கை செயலிழப்பு, பேச்சு குளறுதல்) முதல் மூன்று மணி நேரத்திற்குள்ளாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். அதன்பின்பு பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு எந்த வகையான பக்கவாதம் என்பதைக் கண்டறிந்த பின்னர் அதற்கேற்ற சிகிச்சை தொடங்கப்படும்.

ஒவ்வொரு 6 விநாடிக்கும் ஒருவர் பக்கவாதத்தினால் பாதிக்கப்படுகிறார். அதுபோல ஒவ்வொரு 8 விநாடிக்கும் ஒரு பெண் இந்நோய்க்கு உட்படுகிறார் என ஆய்வுகள் கூறுகின்றன. மேலும், மனிதனின் இயல்பு வாழ்க்கையை முடக்கி விடும் ஆபத்தான நோயாக இது உள்ளது.

பொதுவாக பெண்களுக்கு பக்கவாதம் ஏற்படாது என்ற ஒரு கருத்து நிலவியது. ஆனால் உண்மையில் பெண்களுக்கு இந்தநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம். ஆண்களை காட்டிலும் அவர்களுக்கு தீவிரம் அதிகளவில் இருக்கும். சிலசமயம் சிகிச்சையில் முன்னேற்றம் கூட தாமதமாக இருக்கும்.

இந்நோய் ஏற்பட்ட பின்பு தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடத்திற்கும் மூளையில் இரண்டு மில்லியன் நியூரான்களை இழக்கிறோம். எனவே நேரம் கடத்தாமல் உடனடியாக செயல்படுவதை உணர்த்தி, விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் உலக பக்கவாத அமைப்பு 2022 ஆம் ஆண்டிற்க்கான கருப்பொருளாக “#Precioustime” (பொன்னான நேரம்) என்பதை கொண்டுள்ளது. காலம் தாழ்த்தாமல் மருத்துவமனைக்கு விரைவிலேயே செல்லவேண்டும் என்பதை இது உணர்த்துகிறது.

இந்நோய் 50 வயதை தாண்டியவர்களுக்கு பொதுவாக ஏற்படுகிறது. ஆனால் இப்போது நிலைமை மாறி அனைத்து வயதினருக்கும், அதாவது பிறந்த குழந்தையில் தொடங்கி வயதானவர்கள் வரை காணமுடிகிறது. அதேசமயம் இவர்கள் அனைவர்க்கும் ஒரேமாதிரியான காரணங்கள் இருப்பதில்லை.

பேசும்பொழுது திடீரென குழறல், கை, கால் அல்லது உடலின் ஏதாவது ஒரு பகுதி எதிர்பாராமல் செயலிழந்து, அரை மணி நேரத்திற்குள் தானாகவே சரியாகி விடுவதை (transient ischemic attack) மினிஸ்ட்ரோக் என்கிறோம். இது தீவிர பக்கவாதம் ஏற்படுவதற்கான முன் அறிகுறியாகவும் கூட இருக்கலாம். ஆனால் பலர் இந்த அறிகுறியை அலட்சியப்படுத்தி சாதாரணமாக விட்டுவிடுகின்றனர்.

வயதாகுதல், மரபுரீதியான காரணங்களினால் கூட பக்கவாத நோய் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. இருதய பாதிப்பு, சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், கொழுப்பு போன்றவை ஒரு நபருக்கு இருந்தால் இந்நோய் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. இவை தான் பக்கவாதத்திற்கான காரணிகளாக உள்ளன. இவற்றை நாம் வராமல் தடுத்தாலோ அல்லது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தாலோ இதில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம்.

பக்கவாதம் ஏற்பட்டுள்ள ஒருவருக்கு அவருக்கு தெரியாமலேயே மாரடைப்பு ஏற்பட 20 % வாய்ப்பு உள்ளது. எனவே பாதிக்கப்பட்டவர், இருதய நிபுணரை சந்தித்து ஆலோசனை பெறுவதும், இருதய பரிசோதனைகள் செய்வதும் அவசியம். கே.ஜி மருத்துவமனையில் இது ஒரு நெறிமுறையாக கடைபிடிக்கப்படுகிறது.

பக்கவாதத்தில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று, மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படுவது, மற்றொன்று, ரத்தம் மூளையின் உள்பகுதியில் கசிவது. இந்த இரண்டு நிலைகளையும் நோயாளியின் வெளிப்புற தோற்றத்தை வைத்து மட்டுமே கண்டறிந்து விடமுடியாது. இதனை சி.டி.ஸ்கேன் பரிசோதனையின் மூலமே கண்டறிய முடியும். 1995 ஆம் ஆண்டிற்கு பிறகே பக்கவாத சிகிச்சையில் நிறைய மாற்றங்கள் வந்தது. இந்நோய்க்கான சிகிச்சை முறையில் பல நவீன முறைகளும் தற்போது வந்துவிட்டன.

ஒருவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை எடுத்த பின்பு அவர் வாழ்நாள் முழுவதும் மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும். அப்போது மருத்துவ பரிந்துரைகளை கட்டாயம் பின்பற்றுவது அவசியம். வாழ்க்கை முறையில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்வதும் இன்றியமையாத ஒன்று.

பக்கவாதம் சிகிச்சைக்கு கே.ஜி மருத்துவமனையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நவீன கேத்லேப் இயந்திரம்.

பக்கவாதத்திற்கு நவீன சிகிச்சை கே.ஜி.,யில் அறிமுகம்!

மருத்துவர்கள் ஹரிஹரபிரகாஷ் மற்றும் சபரீஸ் (இன்டெர்வென்ஷனல் ரேடியாலஜிஸ்ட்) இணைந்து பக்கவாதத்திற்க்கான சிகிச்சை மற்றும் விரைந்து செயல்படுதல் பற்றி கூறுகையில்: பக்கவாதத்தில் உள்ள இரண்டு வகையில் முதலாவதாக, மூளைக்கு செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு (Ischemic Stroke) போதுமான அளவு ரத்தம் மூளைக்கு செல்லாமல் இருக்கும் நிலையே பொதுவாக (70 % – 80 % வரை) காணப்படுகிறது. அடுத்ததாக அதிக ரத்த அழுத்தத்தினால் ரத்தக் குழாயில் வெடிப்பு உருவாகி கசிவு (Haemorrhagic Stroke) ஏற்படும் நிலை 20% உள்ளது.

பக்கவாதம் ஏற்பட முக்கிய காரணமாக உள்ள ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் மற்றும் கொழுப்பை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். ஏனென்றால் இவை கட்டுப்பாடில்லாமல் இருக்கும் போது ரத்தக் குழாய் பாதிக்கப்பட்டு மூளைக்கு செல்லும் ரத்தப் பாதையில் அடைப்பை உருவாக்கும். மேலும் இதனோடு மதுஅருந்துதல், புகை பழக்கம் ஆகியவற்றையும் தவிர்க்க வேண்டும்.

அடைப்பின் தன்மையைப் பொறுத்து மருந்துகள் மூலமாகவும் கட்டியினை கரைக்க முடியும். மேலும் த்ரோம்போலைசிஸ், மெக்கானிக்கல் த்ரோம்பெக்டோமி என்ற சிகிச்சையை பக்கவாதம் ஏற்பட்ட சில மணி நேரத்திற்கு உள்ளாக மேற்கொள்ளும் போது அடைப்பை சரிசெய்து ரத்த ஓட்டத்தை சீராக்க முடியும்.

திடீரென கண் பார்வை மங்குதல், தலைசுற்றல், வாந்தி போன்ற அறிகுறிகள் தீவிர பக்கவாதம் ஏற்படுவதற்கு முன்பு, கழுத்து பகுதி ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளது என்பதை உணர்த்தும் எச்சரிக்கை குறியீடுகளாக உள்ளன. இந்த நிலையில் நரம்பியல் மருத்துவரை முன்னதாகவே அணுகவேண்டும்.  இன்டெர்வென்ஷனல் ரேடியாலஜி முறையில் ஆஞ்சியோபிளாஸ்ட்டி செய்யப்பட்டு இந்த அடைப்பு நீக்கப்படும்.

இந்தியாவைப் பொறுத்தவரை மக்கள் மத்தியில் பக்கவாதம் குறித்த விழிப்புணர்வு அதிகளவில் ஏற்படவில்லை. அறிகுறிகள் தென்பட்ட உடன் அனைத்து வசதிகளும் உள்ள மருத்துவமனைக்கு விரைவில் நோயாளியை அழைத்து வரும்போது சிகிச்சையிலும் முன்னேற்றம் ஏற்படும். இதன்மூலம் பக்கவாதம் ஏற்பட்ட பின்னர் பிறரை சார்ந்து வாழாத நிலையை 90% தவிர்க்க முடியும். மேலும் மருத்துவ துறையில் ஏற்பட்டுள்ள நவீன முன்னேற்றம் காரணமாக நோயாளி விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பி விடலாம்.

இருதயமும், பக்கவாதமும்!

 – டாக்டர் நித்தியன்

 இருதய சிகிச்சை நிபுணர்

இருதயத்திற்கும், பக்கவாதத்திற்கு தொடர்பு உண்டு. இருதயமும், மூளையும் ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்புடைய உறுப்புகளாக உள்ளன. ஏனெனில் இருதய பாதிப்பு உள்ள ஒருவருக்கு பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. ரத்த அழுத்தம், கட்டுப்பாடற்ற சர்க்கரை நோய், புகை பிடித்தல் ஆகியவை தான் இந்த இரு நோய்களுக்கான முக்கிய காரணங்களாக உள்ளன.  இருதயம் பலவீனமானவர்கள், இருதய வால்வு குறைபாடு உள்ளவர்கள், வால்வு மாற்றப்பட்டவர்களுக்கு பக்கவாதம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

மேலும் இருதய பாதிப்புக்கான மருந்துகளை முறையாக உட்கொள்ளாமல் இருந்தால், இருதய ரத்தக்குழாயில் கட்டி உருவாகி, அது மூளைக்கு செல்லும் ரத்தக் குழாயிலும் அடைப்பை ஏற்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன.

இருதயக் குழாயில் அடைப்பு மற்றும் மூளையின் ரத்தக் குழாயில் அடைப்பு என இவை இரண்டிற்கும் ஏறத்தாழ ஒரே மாதிரியான மருந்துகள் தான் பயன்படுத்தப்படுகிறது. மேலும், பக்கவாதம் ஏற்பட்டால் நரம்பியல் மருத்துவரை மட்டுமல்லாமல் இருதய நிபுணரையும் சந்தித்து ஆலோசனை பெறுவது முக்கியம்.