தொடர் தூக்கமின்மை: வாழ்வின் சமநிலையை திசை திருப்பும்

அன்றாடம் ஓடி உழைத்து களைத்த மனிதனுக்கு தூக்கம் மிகவும் இன்றியமையாதது. அதில் கிடைக்கும் ஓய்வினால் போதிய ஆற்றல் உடலுக்கு கிடைக்கிறது. ஆனால் இப்போது இரவு நேரத்தில் பெரும்பாலானோர் 11, 12 மணி அல்லது அதற்கும் மேலாக உறங்குவதற்கு தாமதிக்கின்றனர். தனிப்பட்ட மனிதரைப் பொறுத்த அளவில் இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். பணி சூழல் அழுத்தம், மன அழுத்தம், டிஜிட்டல் திரையில் அதிக நேரம் செலவிடுவது, குடும்பம் அல்லது சமூகம் சார்த்த பிரச்சனைகள் போன்ற காரணங்களை உதாரணமாக கூறலாம்.

ஆனால் நமது உடலுக்கு போதுமான ஓய்வு தூக்கத்தின் மூலமே கிடைக்கிறது. ஒருவருக்கு தினசரி 8 மணிநேர தூக்கம் தேவை. அதிகமானோர் இந்த நேரத்தை கடைபிடிப்பதில்லை. அதேசமயம் இதுபோன்ற போதிய தூக்கமின்மை பல உடல்நலப் பிரச்னைகள் வர காரணமாக அமையும் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.

இரவில் போதிய தூக்கம் இல்லாத போது, பகலில் ஒருவித எரிச்சல் மற்றும் அழுத்தம் உருவாகும். தூக்கமின்மை தொடர்ந்தால் ஒருவரது வாழ்வில் மன அழுத்தம் மற்றும் உற்சாகமின்மை ஏற்படும்.
பக்கவாதம் மற்றும் மாரடைப்பு போன்ற நோய்கள் ஏற்படவும் தூக்கமின்மை ஒரு முக்கிய காரணமாக அமைகிறது. போதுமான அளவு தூங்காதபோது மன அழுத்தத்தை ஏற்படுத்தும் ஹார்மோனான கார்டிசோல் அதிக அளவில் உடலில் உற்பத்தி ஆகிறது.

மூளை போதுமான அளவு ஓய்வெடுக்க முடியாதபோது மன நலனானது தீவிரமாக மோசமடைய வாய்ப்பு உள்ளது. சரியாக தூங்காத போது வாகன விபத்து ஏற்படுவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகவும் அமைகிறது. மேலும் இந்த தூக்கமின்மை உடற்பருமனையும் ஏற்படுத்துகிறது. இது உணவு பழக்கவழக்கங்களிலும் மாற்றத்தை உண்டாக்குகிறது.

நீண்ட நாட்கள் போதிய தூக்கம் இல்லாவிட்டால் அதனால் நாள்பட்ட மன அழுத்தம் உருவாகும். இதனால் உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் சரிவர இயங்காமல் சளி மற்றும் காய்ச்சல் போன்ற தொற்றுகள் எளிதில் பரவும்.

ஒருநாளில் 5 அல்லது 6 மணிநேரத்திற்கும் குறைவாக தூங்குபவர்களுக்கு உயர் ரத்த அழுத்த பிரச்னை இருப்பது ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. நீண்ட நாட்கள் சரியாக தூங்காதபோது அது ரத்த அழுத்தத்தை அதிகரிப்பதுடன், இதயத்துடிப்பு அதிகரிப்பு மற்றும் அழற்சி போன்ற பிரச்னைகளையும் தூண்டும்.

எனவே போதுமான அளவு தூக்கம் பல பிரச்சினைகளை வரவிடாமல் தடுக்கிறது. தூக்கம் மற்றும் ஓய்வை உடலுக்கு கொடுப்பது மிகமிக அவசியம்.