மூளைச் சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்: 7 பேர்க்கு மறுவாழ்வு!

கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் மூளைச் சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டதால் ஏழு பேர்க்கு மறுவாழ்வு கிடைத்தது.

கோவை  பீளமேடு பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன். இவருக்கு வயது 38. இவர், கடந்த 19.09.2023 ஆம் தேதியன்று இரண்டு சக்கர வாகனத்தில் சாலையில் சென்று கொண்டிருக்கையில் எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டு  பலத்த காயம் அடைந்தார். இதனையடுத்து, கோவை அரசு  மருத்துவமனைக்கு கொண்டு சென்ற அவருக்கு அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

அதன்பின், மேல்சிகிச்சைக்காக கே.எம்.சி.ஹெச் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு  அங்கு அவருக்கு  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், அவரது உடல் நிலையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. 22.09.2023-ஆம் தேதி அவருக்கு மூளைச் சாவு ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து, அவரது உறவினர்கள்  உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர்.  தமிழ்நாடு உறுப்பு தான ஆணையத்தின் அனுமதியுடன் அவரது இருதயம், சிறுநீரகங்கள், கல்லீரல் மற்றும் கண்கள், ஆகியவை தானமாக பெறப்பட்டது. கல்லீரல் மற்றும் ஒரு சிறுநீரகம் கே.எம்.சி.ஹெச். மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் இருதயம் மற்றும் கண்கள், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டன.

கே.எம்.சி.ஹெச் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள்  உறுப்புகளை மற்ற நோயாளிகளுக்கு பொருத்துவதற்கு உறுப்புகளை அனுப்பிவைத்தனர். இது குறித்து கே.எம்.சி.ஹெச். மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்ல ஜி பழனிசாமி கூறுகையில், “மக்களிடையே உடல் உறுப்பு தானம் குறித்து அதிக விழிப்புணர்வு தேவைப்படுகிறது. ஒருவர் இறந்த பிறகு அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டால் அது பலரது உயிரைக் காப்பாற்ற உதவும். பின்னர்  உடல் உறுப்பு தானம் வழங்கிய மகேந்திரன் குடும்பத்திற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார்.