பருத்தி விலை ஏற்றம் நூற்பாலைகள் பீதியடைய வேண்டாம்

பருத்தி விலை கடந்த 15 நாட்களில், 10 முதல் 12 சதவீதம் அதிகரித்து, ஒட்டு மொத்த ஜவுளி மதிப்பு சங்கிலியைப் பீதிக்கு உள்ளாக்கியுள்ளது என்று தென்னிந்தியப் பஞ்சாலைகள் சங்கத்தின் (சைமா) தலைவர் டாக்டர் சுந்தரராமன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘என்றும், சங்கா;-6 ரக பருத்தியின் விலை கண்டி ஒன்று ரூ.55,300 மற்றும் சில நூறு ரூபாய்கள் ஏற்ற இறக்கமாக இருந்தது, தற்போது கண்டி ஒன்று ரூ.62,000 ஆக உயர்ந்துள்ளது. 2023-24 பருத்தி பருவத்திற்கான பருத்தி உற்பத்தி மற்றும் நுகர்வுக்கான குழு (CoCPC) பருத்தி உற்பத்தி அளவு 316.57 லட்சம் பேல்கள், இறக்குமதி 12 லட்சம் பேல்கள், நுகர்வு 310 லட்சம் பேல்கள், ஏற்றுமதி 25 லட்சம் பேல்கள் என்றும் இறுதி இருப்பு 57.65 லட்சம் பேல்கள் என்று மதிப்பீடு செய்துள்ளது எனக் குறிப்பித்துள்ளார்.

மேலும், நூற்பாலைகளின் திறன் பயன்பாடு 70 முதல் 75 சதவீதத்திலிருந்து, 80 முதல் 90 சதவீதம் வரை அதிகரித்துள்ளது என்றும், சந்தை தகவல்களின்படி சுமார் 20 லட்சம் பேல்கள் ஏற்றுமதிக்காக ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்தியாவின் பருத்தி விலை சர்வதேச விலையை நெருங்கி வருவதால், பருத்தி ஏற்றுமதிக்கான தேவை குறையும் என்றும், எனவே மதிப்பிடப்பட்ட இறுதி இருப்பு அதிகமாக இருக்கும் என்றும் அதன் மூலம் பருத்தி போதுமான அளவு கிடைப்பது உறுதி செய்யப்படும்’ எனவும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் பிப்ரவரி 2024 வரை சுமார் 215 லட்சம் பருத்தி பேல்கள் சந்தைக்கு வந்துள்ளதாகவும், ஒரு சில நாட்களைத் தவிர, நாளொன்றுக்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமான பருத்தி பேல்கள் வந்து கொண்டிருப்பதாகவும் சைமா தலைவர் கூறியுள்ளார்.

இந்த சீசனில் நல்ல தரமான பருத்தி கணிசமாகச் சந்தைக்கு வந்துள்ளதால், இந்த விலை உயர்வு பன்னாட்டு வர்த்தகர்களுக்கு மட்டுமே பயனளிக்கும், விவசாயிகளுக்கு அல்ல என்றும், இது சீசன் முடிவு வரை தொழிலில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறிய அவர்,

கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் அக்டோபர் வரை அனைத்து பருத்தி வகைகளுக்கு 11 சதவீத இறக்குமதி வரியிலிருந்து விலக்கு அளித்தது போன்று மீண்டு விலக்களித்து அதன் மூலம் பருத்தி விலை சீராக இருக்க உதவுமாறு அவர் அரசிடம் வேண்டுகோள் விடுத்தார். பருத்தி சீசன் காலத்தில் 11 சதவீத இறக்குமதி வரி விதிப்பதும், சீசனல்லாத காலத்தில் விலக்களிப்பதும் விவசாயிகளுக்கும், நூற்பாலைகளுக்கும் வெற்றிகரமான சூழ்நிலையை உருவாக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.