விண்வெளி ஆய்வுத் துறையில் வாய்ப்புகள் காத்திருக்கிறது

சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளியில் தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்படுவதன் ஒரு பகுதியாக நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில், இஸ்ரோ விஞ்ஞானியும், சந்திரயான்-3 திட்ட இயக்குநருமான வீரமுத்துவேல் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

அவர் தனது உரையில், ‘சந்திரயான்-3 நிலவின் தரையில் இறங்கியது மிகவும் பெருமைப்படவேண்டிய நிகழ்வாகும். இந்நிகழ்வினை நடத்திக்காட்டும் திட்டத்திற்கு இயக்குநராக இருந்து செயல்பட்டது மிகவும் மகிழ்ச்சியளிக்கின்றது. விக்ரம் சாராபாய் ‘விண்ணிற்குச் செயற்கைக்கோள் அனுப்பி நாட்டு மக்களுக்கு அதன் மூலம் உதவிட வேண்டும்’ என்கின்ற உயர்ந்த சிந்தனைதான் இன்றைக்கு சாத்தியமாகியிருக்கின்றது.

இஸ்ரோ மூலம் பல செயற்கைக்கோள்களை விண்ணிற்குச்செலுத்தி வருகிறோம். அரசு பள்ளியில் எந்த ஒரு வசதி வாய்ப்பும் இல்லாத காலத்தில் படித்து இன்று இந்த நிலைக்கு நான் வந்திருக்கின்றேன். தற்காலத்தில் இருக்கின்ற தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு இடையே கல்வி கற்கின்ற மாணவர்களாகிய உங்களுக்கு விண்வெளி ஆய்வுத் துறையில் மிகப்பெரிய வாய்ப்புகள் காத்திருக்கின்றன’ என்று பேசினார். தொடர்ந்து இஸ்ரோவின் செயல்பாடுகளைப் பற்றியும், சந்திரயான்-3 செயற்கைக்கோள் உருவான விதம், மேற்கொள்ளப்பட்ட சோதனைகள், தொழில்நுட்ப வசதிகள், பயன்படுத்தப்பட்ட வழிமுறைகள், நிலவில் தரைஇறங்கிய வெற்றித் தருணம் ஆகியனவற்றைப் பற்றி விளக்கியுரைத்தார்.

நிகழ்ச்சிக்குப் பள்ளிச் செயலர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் தலைமை தாங்கினார். அவரின் தலைமையுரையில், ‘பாரதியார் ‘சந்திரமண்டலத்தியல் கண்டு தெளிவோம்’ என்று பாடினார். நம் நாட்டு மக்கள் மிகச்சிறந்த சிந்தனைகளைக் கொண்டவர்கள். அந்தச் சிந்தனைகளைச் செயல்வடிவம் ஆக்குகின்ற எண்ணத்தோடு மாணவ மாணவியர் வளரவேண்டும். அடக்கமுடியாத ஆர்வம் உங்களிடத்தில் இருந்தால் அலைகடலையும் நிறுத்தலாம். மாணவர்கள் இளம்பருவத்தில் ஆர்வத்துடன் அனைத்துப் பாடங்களையும் கற்றுக்கொள்ள வேண்டும்.

வருங்காலத்தில் நம் பள்ளி மாணவ மாணவியர் விண்வெளித்துறையில் சேவைபுரிகின்ற வகையில் தங்களைத் தகுதிபடுத்திக்கொள்ள வேண்டும். இன்று நம் பள்ளிக்கு வருகை தந்து, இந்திய விண்வெளித்துறை பற்றியும் சந்திரயான்-3 பற்றியும் விரிவாக உரையாற்றிய வீரமுத்துவேல் நிர்வாக அறங்காவலர் ராமசாமி சார்பிலும், பள்ளி சார்பிலும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று பேசினார்.