வேதாந்தா ரிசோர்சஸ் நிறுவனம்  பத்திரதாரர்களுக்கு  பணத்தை செலுத்தும் பணி நிறைவு

உலோகங்கள் மற்றும் சுரங்க நிறுவனத் துறையில் முன்னணி நிறுவனமாகத் திகழும் வேதாந்தா ரிசோர்சஸ் நிறுவனம் கடன் மறுசீரமைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாகத் தனது பத்திரதாரர்களுக்கு கடந்த வெள்ளிக்கிழமை 779 மில்லியன் அமெரிக்க டாலர் தொகையை முன்பணமாகச் செலுத்தி, திருப்பிச் செலுத்தும் பணியை முடித்துள்ளது. மேலும் ஆண்டின் தொடக்கத்தில் 3.2 பில்லியன் டாலர் பத்திரங்களின் முதிர்வு தொகை வெற்றிகரமாக 2029 வரை நீட்டிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளது.

இது குறித்து இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- வேதாந்தா ரிசோர்சஸ் நிறுவனம், பத்திரங்களின் ஒரு பகுதியை மீட்டெடுக்கவும், அந்த பத்திரங்களின் முதிர்வு காலத்தை நீட்டிக்கவும், பத்திரதாரர்களுக்கு 779 மில்லியன் அமெரிக்க டாலர்களை முன்பணமாகச் செலுத்தியுள்ளது. மறுசீரமைப்பிற்கு ஒப்புக்கொண்ட பத்திரதாரர்களுக்கு 68 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஒப்புதல் கட்டணத்தையும் செலுத்தியுள்ளது. கடந்த ஜனவரி மாதம் வேதாந்தா தனது கடன் சுமையைக் குறைக்க நான்கு  பத்திரங்களை மறுசீரமைக்க பத்திரதாரர்களிடமிருந்து ஒப்புதல் பெற்றது. இந்தத் பத்திரங்களில் ஒவ்வொன்றும் 2024ல் முதிர்வுத் தொகைக்கு வரவேண்டிய  1 பில்லியன் அமெரிக்க டாலர் இரண்டும், 2025ல் 1.2 பில்லியன் அமெரிக்க டாலர் கொண்ட ஒரு பத்திரமும், 2026ல் 600 மில்லியன் அமெரிக்க டாலர் கொண்ட ஒரு பத்திரமும் அடங்கும்.

2024 மற்றும் 2025-ம் ஆண்டுகளில் முதிர்ச்சியடையும் 3.2 பில்லியன் டாலர் கடனில் ஒரு பகுதியை மறுநிதியளிப்பு அல்லது திரும்பச் செலுத்துவதற்காகத் தனியார் கடன் நிதி நிறுவனங்களிடம் இருந்து 1.25 பில்லியன் டாலர் கடனை கடந்த டிசம்பர் மாதத்தில் இந்நிறுவனம் பெற்றுள்ளது. மேலும் வேதாந்தா குழுமம் கடந்த ஆண்டு செப்டம்பரில் ஒரு குறிப்பிடத்தக்கப் பிரித்தல் மற்றும் மறுசீரமைப்பு திட்டத்தை அறிவித்தது. இந்த நடவடிக்கை காரணமாக 17 முக்கிய வணிகங்களில் வேதாந்தா குழுமத்தை மறுசீரமைக்கும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து அந்த அறிக்கையில், ஒவ்வொரு வணிகமும் உலகத் தரம் வாய்ந்த நிர்வாகத் தலைமையைக் கொண்டுள்ளது, சமீபத்திய அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகிறது, இது இறக்குமதி மற்றும் உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்வதை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது. நிறுவன மற்றும் சில்லறை முதலீட்டாளர்களுக்கு உயர்தர மற்றும் பல்வகைப்பட்ட முதலீட்டு வாய்ப்புகளையும் அவை வழங்குகின்றன.