என்.ஜி.பி. கல்லூரியில் தேசிய கருத்தரங்கம் 

டாக்டர் என்.ஜி.பி.தொழில்நுட்பக் கல்லூரியின் உயிர்மருத்துவப் பொறியியல் துறை சார்பில் “பயனுள்ள உத்திகள்” என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது.

இரண்டு நாள்  நடைபெற்ற இக்கருதரங்கம்  அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி  (CSIR) நிதி உதவியுடன்,  ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் கோளாறால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் அறிவாற்றலை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டது .  முதல் நாள் துவக்க விழாவில் கல்லூரியின் உயிர்மருத்துவப் பொறியியல் துறையின் தலைவர் விஜயகுமார் வரவேற்றார், முதல்வர் பிரபா தலைமை வகித்தார்.

கோவை மருத்துவ மையம் மற்றும் மருத்துவமனையின் நரம்பியல் நிபுணர் மற்றும் ஆலோசகர் டாக்டர் ராஜேஷ் சங்கர்,  கருத்தரங்கைத் தொடங்கி வைத்து, ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளைக் கையாள்வதில் பயனுள்ள உத்திகள், ஆட்டிசத்தின் சிக்கலான மூலங்களைப் புரிந்துகொள்வது குறித்த தனது அனுபவத்தையும் அறிவையும் பகிர்ந்து கொண்டார்.

அதனைத் தொடர்ந்து, பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தின் இணைப் பேராசிரியர் பாலாஜி ஜெயபிரகாஷ், “நினைவக ஒருங்கிணைப்பு: ஆர்ஏஎஸ் மற்றும் ஆர்ஏசி- இன் பங்கு” என்ற தலைப்பில் தொழில்நுட்ப உரை நிகழ்த்தினார். அதையடுத்து, கேரள மாநிலம், கோழிக்கோடு தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் மின் பொறியியல் துறையின் இணைப் பேராசிரியர் சுபா டி புதன்கட்டில்  “ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் கோளாறுக்கான ஆராய்ச்சியின் எதிர்கால திசைகள்”, என்ற தலைப்பில் பேசினார்.

இரண்டாம் நாள் நிகழ்வில், ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் கோளாறால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான நியூரோ-இமேஜிங் நுட்பங்கள் குறித்து, கோவை மருத்துவ மையம் மற்றும் மருத்துவமனை குழந்தைகள் கதிரியக்க நிபுணர், கண்ணன் உரையாற்றினார். அதை தொடர்ந்து, கே.எம்.ஹெச்சின்  சுகாதார அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், மனநல மருத்துவர் சத்தியசீலன் ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் கோளாறு உள்ள குழந்தைகளின் அறிவாற்றல் திறன்களை மேம்படுத்துவதற்கான நடத்தை சிகிச்சைகளை ஆராய்வது பற்றிய தனது ஆராய்ச்சி அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.