மருத மலை தைப்பூச திருவிழா தேதி அறிவிப்பு

மருத மலை சுப்ரமணியசுவாமி திருக்கோயில் தைப்பூச தேர்த்திருவிழா அறிவிக்கப்பட்டுள்ளது.

முருகனின் 6 படை வீடுகளுள் இல்லாத கோயிலாக இருந்தாலும் மருத மலைக் கோயில் மிகவும் பிரசித்திபெற்ற, பிரபலமான முருகன் கோயிலாக உள்ளது. இதனால் இதனை முருகனின் 7ம் படைவீடு என்றும் பலர் கூறுவர்.

இக்கோயிலுக்குக் கோவை மட்டுமல்லாது தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலிருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

இந்த கோயிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்தாண்டுக்கான தைப்பூச திருவிழா தேதி மற்றும் நிகழ்ச்சி விவரங்களைக் கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

மருத மலைக் கோயிலில் இந்தாண்டு தைப்பூச திருவிழா வரும் 19ம் தேதி காலை 7 மணியளவில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வரும் 24ம் தேதி காலை 9 மணி முதல் 10  மணி வரை திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

வரும் 25ம் தேதி காலை 7.30 மணிக்கு வெள்ளை யானை வாகனத்தில் திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெறுகிறது. 11.30க்கு தைப்பூசம் திருத்தேர் வடம்பிடித்தல்  நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து வரும் 26ம் தேதி தெப்பத்திருவிழா நிகழ்ச்சி நடைபெறுகிறது.

தைப்பூச திருவிழா நாட்களான 25 மற்றும் 26ம் தேதிகளில் பக்தர்கள் மலைப்பாதையில் கோயிலுக்குச் செல்ல அனுமதி இல்லை என்றும் பக்தர்கள் மலைப்படிக்கட்டு மூலமாகவே கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விழா ஏற்பாடுகளைக் கோயில் துணை ஆணையர் ஹர்சினி, அறங்காவலர் குழு தலைவர் ஜெயகுமார், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மகேஷ்குமார், பிரேம்குமார், கனகராஜ், சுகன்யாராசரத்தினம் ஆகியோர் மேற்கொண்டுள்ளனர்.