ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டிலில் 2 லட்சம் நானோ பிளாஸ்டிக்

ஒரு லிட்டர் பிளாஸ்டிக் பாட்டிலில் இருக்கும் தண்ணீரில் 2 லட்சம் 40 ஆயிரம் நானோ பிளாஸ்டிக் துகள்கள் உள்ளதாக கொலம்பியா பல்கலைக்கழகம் மற்றும் ரட்ஜர்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

மைக்ரோ பிளாஸ்டிக்கை விட நானோ பிளாஸ்டிக்குகள் உடல் ஆரோக்கியத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன. மேலும், இந்த நானோ பிளாஸ்டிக் துகள்கள் தலை முடியின் அகலத்தில் ஒன்றரை சதவீதம் மட்டுமே இருக்கும். அவை மனித உயிரணுக்களுக்குள் ஊடுருவி, ரத்த ஓட்டத்தில் நுழைந்து உடல் உறுப்புகளைப் பாதிக்கும் அளவுக்கு ஆபத்தானது என்று ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளது.

இந்த நானோ பிளாஸ்டிக்குகள் தொப்புள் கோடி வழியாக தாயின் கருப்பையில் வளரும் சிசுவின் உடலுக்குள்ளும் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். கண்ணைக் கவரும் வண்ண வண்ண பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீரை அடைத்து வைத்துக் குடிக்கையில் உண்டாகும் ஆரோக்கியம் சார்ந்த பாதிப்புகளையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதே ஆராய்ச்சியாளர்களின் கோரிக்கையாக உள்ளது.